நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து :அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் பறிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

டெல்லி : எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே முடித்துவைக்கப்பட்டு மார்ச் 23ம் தேதி இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.  சமூக இடைவெளியை பின்பற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நிலையில் மாநிலங்களவை செயலகம் வெளியிட அறிவிப்பில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இடம் பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் மசோதாக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஸிரோ அவர் எனப்படும் பூஜ்ய நேரம் உள்ளிட்ட அவை நடவடிக்கைகள் எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை.  நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் செப்.15ம் தேதி முதல் அக்.1ம் தேதி வரை மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான செப்.14ம் தேதி மட்டும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவை கூட்டம் நடக்கும் என்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவை செயல்பாடுகள் குறித்து அதன் செயலாளர் அறிவித்துள்ளார்.வார இறுதி நாட்களிலும் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே வரலாறு காணாத பொருளாதார சரிவு, சீனாவின் ஊடுருவல் முயற்சி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

எதிர்கட்சிகள் கண்டனம்

இதனிடையே நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனி நபர் மசோதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மக்களின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப காலம் காலமாக உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை பயன்படுத்தி வருவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.இதே போன்று அரசை கேள்வி கேட்கும் உரிமையை எதிர்கட்சிகள் இழந்துவிட்டதாகவும் ஜனநாயக படுகொலைக்கு கொரோனா தொற்றை மத்திய அரசு காரணமாக கூறுகிறது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: