கொரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது!!

டெல்லி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 10ம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ஏற்பட்டிருந்த ரத்த உறைவை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, எடுக்கப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கோமா நிலையில் இருந்து வந்த அவர் நேற்று ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்றார். இதைத் தொடர்ந்து அவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக ரத்த ஓட்டம் குறைந்து உறுப்புகள் செயலிழந்தன. இதையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி டெல்லி ராணுவ மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து, டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு

மலர் வளையம் வைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயாகர் ஓம்பிர்லா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.கொரோனா வழிகாட்டுதல் நடைமுறையில் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்பதால், அவரது உடல் ராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் டெல்லியில் லோதி மின் மயானத்தில் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. கொரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பிரணாப் முகர்ஜியின் உடல் எரியூட்டப்பட்டது.

Related Stories: