அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!

சென்னை : அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டிருந்தன. இதனால் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையை நம்பி இருக்கும் மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பொதுமக்களின் நலனையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு பேருந்து சேவைகளுக்கு இம்மாதம் முதல் அனுமதி வழங்கியது.

அதன் படி 5 மாதங்களுக்கு பிறகு அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சத்தால் பேருந்தில் பயணிக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படும் என பல வதந்திகள் பரவி வந்தன. இந்த நிலையில் பல்லவன் பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், அடுத்த மாவட்டத்துக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாவட்ட எல்லையில் உள்ள பஸ் ஸ்டான்ட் வரை பேருந்துகள் இயக்கப்படும். இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயங்கும். மேலும், புதிய பாஸ்களை கொடுக்க தொடங்கி விட்டது. செப்.15 வரை பழைய பேருந்து பாஸ்கள் செல்லும். அரசு பேருந்துகளின் கட்டணம்  உயர்த்தப்படுவதாக கூறுவது தவறு. கட்டாயம் பேருந்துகள் கட்டணங்கள் உயர்த்தப்படாது.பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.அறிகுறிகள் இருந்தால் மட்டுமே ஓட்டுனர், நடத்துனர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும், என்றார். 

Related Stories: