ஏழைகளுக்கு ரேஷனில் வழங்கும் இலவச மாஸ்க் வாங்கியதில் பல கோடி முறைகேடு

* தரமற்றது, விலை குறைந்தது என திடுக் தகவல்கள் அம்பலம்

* டெண்டரில் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு சப்ளை ஆர்டர்

* முதல்கட்ட சப்ளை கூட வழங்க முடியாமல் வருவாய்துறை திணறல்

சிறப்பு செய்தி

ஏழைகளுக்கு ரேஷனில் வழங்கப்படும் இலவச மாஸ்க் வாங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது தரமற்ற குறைந்த விலை மாஸ்க் விநியோகம் செய்யப்படுவதாகவும், முன்னணி நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்காமல் விலகியதால், அனுபவம் இல்லாத போலி கம்பெனிகளுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு விரைவாக விநியோகம் செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டுமானால் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டிலும், பிரதமர் மோடியே முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். அதை தொடர்ந்து, தமிழக அரசும் முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் முகக்கசவம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 2.8 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டில் உள்ளபடி 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேருக்கு தலா 2 மாஸ்க் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மாஸ்க்குகள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

முதல்கட்டமாக, 4 கோடியே 44 லட்சம் மாஸ்க்குகள் விநியோகம் செய்யப்படும். சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இந்த மாஸ்க்குகள் விநியோகம் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்தது. தமிழக வருவாய் துறை சார்பில் மாஸ்க் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக, அப்போது வருவாய் துறை செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், மாஸ்க் வாங்குவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினார். பின்னர் அவர் சுகாதாரத்துறை செயலாளராக மாற்றப்பட்டார். தொடர்ந்து, மாஸ்க் வாங்குவதற்கான பணிகளை கவனிக்க அந்த துறையின் இயக்குநர் ஜெகநாதன் நியமிக்கப்பட்டார். அவர்தான் டெண்டர் விடும் பணிகளை கவனித்தார். மாஸ்க் வாங்க, டெண்டர் விதிமுறைகள் வகுக்கப்பட்டு 8 நிபந்தனைகள் வெளியிடப்பட்டன.

விதிமுறையில் கூறியிருப்பதாவது:

*100 சதவீதம் காட்டன் துணியில் மாஸ்க் தயாரிக்க வேண்டும். குளிர்ச்சியாகவும், சுவாசிக்க எளிதாகவும், துவைத்து மீண்டும் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

* பணியின் துணிகளை பயன்படுத்தக் கூடாது.

* இந்த மாஸ்க் ஒரு திரையுடன் இருக்க வேண்டும்.

* மாஸ்க்கில் 3 மடிப்புகள் இருக்க வேண்டும். இரு நூல்கள் (2 ply cotton) தடிமன் கொண்டு மாஸ்க் தயாரிக்க வேண்டும்.

* இந்த மாஸ்க்கை 40s X 40s என்ற சைஸ் நூல்களை கொண்டுதான் தயாரிக்க வேண்டும்.

* மாஸ்க் கலராக இருக்க வேண்டும். வெள்ளை நிறம் மட்டும் வேண்டாம்.

* மாஸ்க்கில் பின்பக்கம் கட்டுவதற்கு எளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது.

* மாஸ்க்கை கட்டும் நான்கு முனையில் உள்ள துணிகள் 8.5 செ.மீ. நீளம் இருக்க வேண்டும். மாஸ்க் அகலம் 8.5 செ.மீ. இருக்க வேண்டும். 3 மடிப்புகளை விரித்தால் 16.5 செ.மீ. இருக்க வேண்டும். நீளம் 18 செ.மீ. இருக்க வேண்டும் என 8 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இந்த நிபந்தனையின்படி, 23 நிறுவனங்கள் டெண்டரில் கலந்துகொண்டனர். அப்போது, திருப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம் மட்டும், கொரோனா காலத்தில் தங்களிடம் ஏராளமான காட்டன் துணிகள் தேங்கியிருந்ததால், அதை பயன்படுத்துவதற்காக குறைந்த விலை அதாவது 6.45 (அடக்கவிலை மற்றும் 5 சதவீதம் ஜிஎஸ்டி) ரூபாய்க்கு மாஸ்க் தயாரித்து தருவதாகவும் கூறியிருந்தது. மற்ற தகுதியுள்ள பல்வேறு நிறுவனங்கள் ₹9 முதல் 12 வரை கொடுத்திருந்தன. ஆனால், அவர்கள் அனைவரும் எத்தனை கோடி மாஸ்க் வேண்டுமானாலும் தயாரித்துக் கொடுக்கிறோம் என்று கூறியிருந்தனர். ஆனால், டெண்டரில் ₹645 மற்றும் ஜிஎஸ்டி கேட்ட நிறுவனத்தின் விலையை கடைசி விலையாக எடுத்துக் கொண்டது வருவாய்துறை.

பின்னர், இந்த விலைக்குத்தான் மாஸ்க் தயாரிக்க வேண்டும். விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தனர். அதில்தான் முறைகேடுகள் அரங்கேற ஆரம்பித்தன. இந்த விலைக்கு திருப்பூரில் உள்ள ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிக்க முன் வந்தது. ஆனால் அவர்களும் ரேஷன் கடைகளுக்கு தேவையான 13 கோடியே 48 லட்சம் மாஸ்க் தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டனர். ஏனெனில், அவர்களிடம் குறைந்த அளவே பழைய துணிகள் கையிருப்பில் இருந்தன. ஆனால், இந்த விலைக்கு மற்ற தரமான பெரிய நிறுவனங்கள் தயாரிக்க முன் வரவில்லை. இதனால், பல போலியான கம்பெனிகளை சிலர் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, சென்னை மற்றும் விருதுநகரைச் சேர்ந்த சில நிறுவனங்கள் அரசு நிர்ணயம் செய்த விலைக்கே தாங்கள் சப்ளை செய்வதாக டெண்டர் போட்டனர். இவ்வாறு அரசு நிர்ணயித்த விலைக்கு தயாரிப்பாக கூறிய சுமார் 5க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு டெண்டர் ஆர்டர் வழங்கப்பட்டன. ஒவ்வொரு கம்பெனியும் தினமும் 10 ஆயிரம் மாஸ்க் தயாரித்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் உத்தரவாதத்தை நம்பித்தான் அரசு முதல்கட்டமாக 4 கோடியே 44 லட்சம் மாஸ்க்குகளை வழங்கப்போகிறோம் என்று அறிவித்தது.ஆனால், அரசு அறிவித்தபடி முதல்கட்டமாக டெண்டர் எடுத்த நிறுவனங்களால் 4.44 கோடி மாஸ்க்கை வழங்க முடியவில்லை.

சில லட்சங்களில்தான் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அரசு அறிவித்தபடி தரமான மாஸ்க்குகளும் வழங்கப்படவில்லை. முக்கியமான 2 விதிமுறைகளை மாற்றிவிட்டு தரமற்ற மாஸ்க்குகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது

தெரியவந்துள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய மாடல் மாஸ்க்குகளை விட பல மடங்கு தரமற்றதும், விலை குறைந்ததுமான மாஸ்க்குகளை தயாரித்து வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அரசு வெளியிட்டுள்ள 8 விதிமுறைகளில் 4வது விதிமுறையான 3 மடிப்பு மற்றும் 2 நூல்களின் தடிமனைக் கொண்டு தயாரிக்க வேண்டும். ஆனால், ஒரு நூல் கொண்டுதான் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளியில் தெரிவதற்காக மடிப்புகளை மடித்து தயாரித்துள்ளனர். இரு நூல்களை கொண்டு தயாரிக்காததால், மாஸ்க் மெல்லியதாகவும், தடிமன் இல்லாமலும் உள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்டதுதான் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் 40s X 40s என்ற நூல்களை கொண்டு தயாரிக்கப்படவில்லை. இதனால் மாஸ்க் கண்ணாடி போல ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் மறு பக்கம் தெளிவாக தெரியும் அளவுக்குத்தான் மாஸ்க் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மாஸ்க்குகள் அனைத்தையும் அதிகாரிகள் சரி பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலை இல்லாத, தகுதியற்ற பல நிறுவனங்கள் டெண்டர் எடுத்த பிறகு, குறைந்த விலைக்கு தரமற்ற துணிகளை வாங்கி, பல டெய்லர் கடைகளில் கொடுத்து தைத்துக் கொடுப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. வேறு தொழில்களை செய்யும் நிறுவனங்களும், புதிய கம்பெனியை தொடங்கி மாஸ்க் வழங்க டெண்டர் எடுத்துள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், அரசு கேட்டபடி தினமும் 10 ஆயிரம் மாஸ்க்குகளை ஒவ்வொரு நிறுவனங்களாலும் வழங்க முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளதாகவும் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுள்ள மாஸ்க்குகள் 4 ரூபாய் முதல் 4.50 ரூபாய்க்கு தயாரிக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றினால் ₹9க்கு மேல் ஆகும். ஆனால் திறமையற்ற நிர்வாகத்தால், குறைந்த விலையை டெண்டர் ரேட்டாக முடிவு செய்து, பெரிய நிறுவனங்களை பங்கேற்க விடாமல் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு நிறுவனத்தைத் தவிர மற்ற போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் முறைகேடுகள் இந்த மாஸ்க் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முறைகேட்டுக்கு உயர் அதிகாரிகளும், மேல்மட்ட அரசியல் புள்ளிகளும் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், தரமற்ற மாஸ்க்குகளை பயன்படுத்துவதால், எளிதில் நோய் தொற்று ஏற்படும் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. அரசு அறிவித்தபடி முதல்கட்டமாக டெண்டர் எடுத்த நிறுவனங்களால் 4.44 கோடி மாஸ்க்கை வழங்க முடியவில்லை. சில லட்சங்களில்தான் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அரசு அறிவித்தபடி தரமான மாஸ்க்குகளும் வழங்கப்படவில்லை. முக்கியமான 2 விதிமுறைகளை மாற்றிவிட்டு தரமற்ற மாஸ்க்குகள் தற்போது வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. டெண்டர் எடுத்த நிறுவனங்கள் தாங்கள் வழங்கிய மாடல் மாஸ்க்குகளை விட பல மடங்கு தரமற்றதும், விலை குறைந்ததுமான மாஸ்க்குகளை தயாரித்து வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Related Stories: