5 மாதங்களுக்கு பிறகு சினிமா படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக எந்த படப்பிடிப்பும் நடக்கவில்லை. கடந்த ஜூலை மாதம் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு தளர்வில் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்திக் கொள்ளவும், திரைப்படத்துறையில் படப்பிடிப்பு தவிர மற்ற பணிகளை நிபந்தனைகளுடன் மேற்கொள்ளவும் அரசு அனுமதித்தது. நேற்று முன்தினம் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இதில் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 75 பேரை கொண்டு நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்தது. அதன்படி இன்று படப்பிடிப்புகள் தொடங்குகிறது. இந்த நிலையில் எப்படி படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை அரசு நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

படப்பிடிப்பில் கண்டிப்பாக 75 பேர் வரை மட்டுமே பணியாற்ற வேண்டும். பணியாற்றும்போது 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் படப்பிடிப்புகளை நடத்தக்கூடாது. படப்பிடிப்பில்  பங்கேற்பவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். படப்பிடிப்பு நடத்தும் இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. படப்பிடிப்பு தளம் அல்லாத ரெக்கார்டிங் தியேட்டர் போன்றவற்றிலும் இந்த சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். படப்பிடிப்புக்கு பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி பாதைகள் இருக்க வேண்டும். படப்பிடிப்பு தளம், அங்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், மேக்அப் அறை, கழிவறை அனைத்தையும் அடிக்கடி கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.

வெளியூரில் படப்பிடிப்பு நடந்தால் உள்ளூர் அதிகாரி ஒருவருடன் தொடர்பில் இருக்க வேண்டும். மாஸ்க், கையுறை போன்றவற்றை கண்டிப்பாக அணிய வேண்டும். கேமரா முன்னால் நடிப்பவர்கள், நடிக்கும்போது மட்டும் மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட மாஸ்க், கையுறையை கையாள துப்புரவு பணியாளர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும். குளிர்பதன கருவிகள் பயன்படுத்தப்பட்டால் அதன் முழு சக்தியில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும்.

ஆடைகள், விக்குகள், மேக்அப் பொருட்கள் என அனைவரும் பயன்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மைக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அப்படி பயன்படுத்தினால் ஒருவர் ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மைக்கை பகிர்ந்து கொள்ளக் கூடாது. வீட்டிலிருந்தே பணிபுரிக்கூடிய பணிகளை வீட்டிலிருந்தே செய்ய வேண்டும். படப்பிடிப்பில் கலந்து கொள்கிறவர்களின் மருத்துவ விவரம், பயண விவரங்களை சரியாக உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: