திருமணத்திற்கு உதவி கேட்ட பெண்ணுக்கு 15 வகை சீர்வரிசை கொடுத்து அசத்திய இன்ஸ்பெக்டர்

சென்னை: செங்குன்றம் காந்தி நகர் பாண்டியன் தெருவை சேர்ந்தவர் சுகன்யா (20). இவருக்கு பெற்றோர் இல்லை. தனது அத்தை சுரேகா வீட்டில் வசித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த  சுகன்யாவுக்கு கோயம்புத்தூரில் உள்ள ரமேஷ்குமார் என்பவருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு வரும் 4ம் தேதி கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சுகன்யா தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரியை முகநூலில் தொடர்பு கொண்டு, தனக்கு திருமணம் நடைபெற உள்ளதால் உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியுமா எனவும் கேட்டுள்ளார். அதற்கு ஆய்வாளர் ராஜேஸ்வரி என்னை எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்டுள்ளார்.

அதற்கு சுகன்யா முகநூலில் உங்களை நான் பின் தொடர்ந்து வருகிறேன். நீங்கள் ஏற்கனவே செய்துள்ள பல விஷயங்களை பார்த்து உள்ளேன், என பதிலளித்துள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, நேற்று முன்தினம் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து திருமண உதவித் தொகையாக ரூ.5 ஆயிரமும், அரை சவரன் கம்மல். மூக்குத்தி பட்டுப்புடவை பீரோ, கட்டில் என 15 வகை சீர்வரிசை பொருட்களை அவருக்கு வழங்கினார். இதை பார்த்த சுகன்யா, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை கட்டிபிடித்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: