மாநிலங்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை:

மத்திய பாஜ அரசு, வரி விதிப்பு முறைகளை சீரமைக்கிறோம் என்கிற பெயரில், ஜி.எஸ்.டி. என்கிற சரக்கு மற்றும் சேவை வரியை 2017 ஜூலை முதல் தேதியிலிருந்து அமலாக்கி வருகிறது. ஜி.எஸ்.டி. வரிமுறையால், மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை ஈடுகட்ட 2017 முதல் 2022 வரையிலும் 5 ஆண்டு காலத்திற்கு இழப்பீடு தருவதாக மத்திய அரசு உறுதியளித்து, உடன்படிக்கை செய்து கொண்டது. கொரோனா நோய் பேரிடர் காலத்தில் மாநிலங்களுக்கு உதவ வேண்டிய மத்திய அரசு தனது கடமைப் பொறுப்பை கை கழுவி விட்டது. ஜி.எஸ்.டி. வரியால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூபாய் 12 ஆயிரத்து 258 கோடிக்கு மேல் மத்திய அரசு பாக்கி தர வேண்டும்.

இது குறித்து அண்மையில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கேட்டபோது. மத்திய நிதியமைச்சர் ரிசர்வ் வங்கியில் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது பொதுக் கடன் சந்தையில் நிதி திரட்டிக்கொள்ளுங்கள் எனக் கூறி, தனது சட்டபூர்வ கடமைகளை சோப்புப் போட்டு கை கழுவி கொண்டார். கடுமையான நிதிச் சுமையால், கழுத்து முறிந்து, கடனில் மூழ்கிக் கிடக்கும்  தமிழ்நாட்டை மேலும் கடன்காரனாக்கி, மீள முடியாத கொத்தடிமை ஆக்கும் மத்திய அரசின் வஞ்சகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: