இரட்டை ஊரடங்கால் ஓராண்டு டோட்டல் ஜீரோ காஷ்மீரில் ரூ.50,000 கோடி பொருளாதாரம் இழப்பு: 5 லட்சம் பேருக்கு வேலை பறிபோன பரிதாபம் மீண்டும் பழைய நிலை திரும்புவது கேள்விக்குறி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு மெகா அதிரடி நடவடிக்கை எடுத்து மாநில சூழ்நிலையையே புரட்டிப்போட்ட நிலையில், ஓராண்டில் ரூ.50 ஆயிரம் கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஆப்பிள் உற்பத்தி, சுற்றுலா வளர்ச்சி, வர்த்தகம் எல்லாம் ஜீரோவானது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்தாண்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த சிறப்பு சட்டம் 370ஐ நாடாளுமன்றம் ரத்து செய்தது. மத்திய அரசு எடுத்த இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு காஷ்மீரில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அரசியல் கட்சிகளிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், காஷ்மீரில் கடைசியாக பாஜ ஆதரவுடன் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி முதல்வராக இருந்தார். 2017ல் பாஜ ஆதரவு வாபஸ் பெற்றதை அடுத்து அவர் ராஜினாமா செய்தார். அதன் பின் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 5 ம் தேதி சிறப்பு சலுகைகள் அளிக்கும் அரசியல் சட்ட 370வது பிரிவு ரத்தானதுடன், காஷ்மீர் ஜம்மு இணைந்து யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதில் சட்டசபை இருக்கும். ஆனால், அதிகாரங்கள் எல்லாம் மத்திய அரசிடம் இருக்கும். லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக இருக்கும்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்தானதுடன் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா மற்றும் ஓமர் அப்துல்லா உட்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு தனிமை சிறையில் வைக்கப்பட்டனர். அதன் பின் கவர்னர் மூலம் நேரடியாக மத்திய அரசு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தது. முழு ஊரடங்கு போடப்பட்டு, ராணுவம் குவிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டது; சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்டனர். விவசாயம் உட்பட எல்லா உற்பத்தியும்  முடங்கியது; வர்த்தகம் அறவே நொறுங்கியது. தொடர்ந்து ஓராண்டுக்கு பின் இப்போது பரூக் அப்துல்லா உட்பட பலரும் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் எதிர்ப்பால் எந்த பலனும் இல்லை. பொருளாதாரம் அடியோடு படுத்து விட்டது; வர்த்தகம் மீண்டும் பழைய நிலைக்கு வருமா என்பது இன்னமும் கேள்விக்குறி தான்.

இது குறித்து பல்வேறு சிவில் மற்றும் வர்த்தக அமைப்புகள் சர்வே எடுத்து மாநிலத்தின் பரிதாப நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. கடந்த ஓராண்டில் சிறப்பு அந்தஸ்து ரத்தான போது கடந்தாண்டு ஆகஸ்ட் முதல் போடப்பட்ட ஊரடங்கு, அதன் பின் கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு என இரட்டை ஊரடங்கு காரணமாக ஓராண்டில் காஷ்மீரின் பொருளாதாரம் அடியோடு ஜீரோவாகி விட்டது. ஓராண்டில் ரூ.50 ஆயிரம் கோடி பொருளாதாரம் ஜீரோவாகி விட்டது. ஆப்பிள் உட்பட விவசாய உற்பத்தி, சுற்றுலா, வர்த்தகம் என்று பல துறைகளிலும் 5 லட்சம் பேர் வேலை இழந்து விட்டனர். வீடுகளில் முடக்கப்பட்ட மக்கள் இன்னமும் நிம்மதியாக வெளியே வர முடியவில்லை. ராணுவம், போலீஸ் ஓரளவு விலக்கி கொள்ளப்பட்டாலும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இன்னும் வரவில்லை.

எங்கெல்லாம் இழப்பு, வேலை பறிப்பு

* கடந்தாண்டு சிறப்பு அந்தஸ்து விலக்கி கொள்ளப்பட்டதும் எல்லா துறைகளும் முடங்கின. மக்கள் நடமாட்டம் அறவே இல்லை; கடைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. சுற்றுலா முடங்கியது.

* கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 4 மாதங்களில் மட்டும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் முடங்கியது.

* சமீபத்தில் எடுத்த கணக்குப்படி, மொத்தம் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரம் முடங்கியது.

* ஆப்பிள் உற்பத்தி ஆண்டுக்கு அதிக அளவில் ஏற்றுமதி வருமானம் ஈட்டித்தரும். ஆண்டுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படும். 14 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வரும். இந்தாண்டு வெறும் 80 கோடி ரூபாய் தான் வருமானம் வந்தது.

* காஷ்மீரில் பெரும் வளர்ச்சி கண்டது சுற்றுலா,கைவினை பொருட்கள் உற்பத்தி தான். அதில் ஆண்டுக்கு 1.45 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு வேலை பறிபோனது. சுற்றுலா வருமானமும் படுத்து விட்டது.

* மீண்டும் எழுமா பொருளாதாரம்?

காஷ்மீர் பற்றி ஆராய்ந்த தெற்காசிய பொருளாதார வல்லுனர் ஷாகீத் உசேன் ஆய்வில் தெரியவந்தது: எந்த ஒரு நாட்டிலும் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தது. காஷ்மீரில் இந்த நிலை தலைகீழாகிப் போனது. இது மீண்டும் சீராக இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கலாம். காரணம், அரசியல் நிலையாமை இருக்கும் வரை எந்த வளர்ச்சியும் சாத்தியமில்லை. பெரிய தொழிற்சாலைகள் கூட அச்சப்படும் போது சிறிய நிறுவனங்களை பற்றி கேட்கவே வேண்டாம். நிலைமை சீராவதுடன், நம்பிக்கையை அதிகரித்தால் தான் வளர்ச்சியை எட்ட முடியும்.

Related Stories: