பல வருஷமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க... கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்தியானந்தா எங்க...திருமண விழாவில் வாலிபர்கள் வைத்த பேனரால் பரபரப்பு

மணப்பாறை: பல வருஷமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க...கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்தியானந்தா எங்க...என்று நித்தியானந்தா படத்துடன் திருமண விழாவில் வாலிபர்களால் வைக்கப்பட்ட விளம்பர பேனர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேலமஞ்சம்பட்டியில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமணம் நடந்த மண்டப வளாகத்தில் மணமகனின் நண்பர்கள் சார்பில் போலீசாரால் தேடப்பட்டு வரும் நித்தியானந்தாவை புகழ்ந்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனரில் ‘‘பல வருஷமா கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க.. கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பன்னுன நம்ம நித்தியானந்தா எங்க...’’ என்று வாசகங்களுடன் அருகிலேயே மணமக்களை வாழ்த்துவதை போலவே நித்தியானந்தா படமும் இருந்தது.

மேலும், நித்தியானந்தாவின் புகழ்பெற்ற உபதேசமான நோ சூடு, நோ சொரணை என்ற மந்திரச்சொல் இடம் பெற்றுள்ளது. அந்த பேனரில் வாலிபர்கள் புகைப்படத்துக்கு கீழே கைலாசா செல்ல இருக்கும் நண்பர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பேனரை பார்த்து திருமண விழாவில் பங்கேற்க வந்தவர்கள் ஆச்சரியம், அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த தகவல் கிடைத்ததும் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த விளம்பர பேனரை அகற்றினர். மேலும், விளம்பர பேனர் வைத்த வாலிபர்களை அழைத்து இனிமேல் இதுபோல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: