'கொரோனா பரவும் நிலையில் நீட் தேர்வு தேவையற்றது' - தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!!

சென்னை:  நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றானது அதிகளவில் பரவி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நீட், ஜே.இ.இ. போன்ற தேர்வுகளை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது சென்னையில் புரசைவாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரசு கட்சியினர், நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வினை ரத்து செய்யக்கோரி முழக்கமிட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமை தாங்கினார். அப்போது நீட் தேர்வு நடத்துவதில் மத்திய அரசின் பிடிவாதத்தை கண்டித்து தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் சேலம், திருசெங்கோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தாண்டு நீட் தேர்வு தேவையற்றது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் நேற்று புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நீட், ஜே.இ.இ., தேர்வுகளை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வலியுறுத்தப்பட்டது.

Related Stories: