மதுரை நகரில் 300 ரவுடிகளை கண்காணிக்கும் போலீசார்: துணை கமிஷனர்கள் பேட்டி

மதுரை: மதுரை நகரில் போலீஸ் கண்காணிப்பில் 300 ரவுடிகள் உள்ளனர் என போலீஸ் துணை கமிஷனர்கள் தெரிவித்தனர்.  மதுரையில் போலீஸ் துணை கமிஷனர்கள் பழனிகுமார், சிவபிரசாத் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை அவனியாபுரம் பகுதியில் தொடர்  வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்து, 15 பவுன் நகைகள், 10 செல்போன்கள், 2 டூவீலர்கள், 2 ஆடுகளை பறிமுதல்  செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஒத்தக்கண் பாண்டியராஜன் தலைமையில் 6 பேர் கொண்ட கும்பல் அதிகாலை 3 மணி முதல் 7  மணிக்குள் சாலைகளில் நடந்து வரும் நபர்களை குறிவைத்து வழிப்பறி செய்துள்ளது. அவனியாபுரத்தை சேர்ந்த அரசு பஸ் நடத்துனர் ஸ்டீபன் வர்கீஸ்,  அவரது மனைவி வக்கீல் கோட்டை ஈஸ்வரி ஆகியோர் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர்.  

வழிப்பறி செய்யும் நகைகளை பெண் வக்கீல் மூலமாக அடகு வைப்பது, விற்பனை செய்யும் வேலையிலும் கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. இதன்மூலம்  பெண் வக்கீலுக்கு நல்ல பணம் கிடைத்துள்ளது. அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஒத்தக்கண் பாண்டியராஜனுக்கு நகரிலுள்ள  பல்வேறு காவல்நிலையங்களில் 30 வழக்குகளும், அவரது கூட்டாளியான அப்பாஸ் என்பவருக்கு 25 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதுதவிர,  அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரை சேர்ந்த டூல்ஸ் பாண்டியன் தலைமையில் 6 பேர் கொண்ட கும்பலும் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு  வந்துள்ளது. இக்கும்பலையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் போல் நடித்து நூதன முறையில் மோசடி செய்து  வந்த 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். குற்றங்களை தடுக்க காலையில் 4 மணி முதல் 7 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 9  மணி வரையும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பணியில் போலீசார்  ஈடுபட்டுள்ளனர். மதுரையில் 300 ரவுகள் கண்டறியப்பட்டு, இவர்களை 110விதியின் கீழ் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பின்னர் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், எஸ்ஐ தென்னரசு மற்றும் போலீசாரை துணைகமிஷனர்கள் பாராட்டினார்.

பெண் வக்கீல், அவரது கணவர் சிக்கியது எப்படி?

* ஒத்தக்கண் பாண்டியராஜ் பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்றபோது, அவரை ஜாமீனில் எடுக்க வக்கீல் கோட்டை ஈஸ்வரி உதவியுள்ளார்.  அவர் ஜாமீனில் வந்து நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கும்போது, அந்த பொருட்களை பெண் வக்கீல் வீட்டில் பதுக்கி வைத்துள்ளதுடன்,  அவர்களுக்கு அடைக்கலமும் கொடுத்துள்ளார். பாண்டியராஜனின் செல்போன் எண்ணை வைத்து பிடிக்க முயன்றபோது, அவரது செல்போன் டவர்  வக்கீல் வீட்டை காட்டியுள்ளது. இதனால் சந்தேகப்பட்டு வக்கீல் வீட்டில் சோதனை செய்தபோது, இந்த கும்பல் சிக்கியது. மேலும் வக்கீலின் கணவர்  ஸ்டீபன் வர்கீஸ், மது போதைக்கு அடிமையானவர். தற்போது ஊரடங்கால் வேலையில்லாமல் இருப்பதால் மதுபாட்டில் கொடுத்து விட்டால் வக்கீலின்  செயலுக்கு உடந்தையாக அவரும் மாறி விடுவது வழக்கமாக கொண்டிருந்தார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: