கடப்பேரி மின்வாரிய கிடங்கில் உதிரிபாகங்களுக்கு பணம் வசூலிப்பு: நிர்வாகிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

தாம்பரம்: மின்வாரிய கிடங்கில் உதிரிபாகங்களுக்கு பணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தாம்பரம், கடப்பேரி பகுதியில் மின்வாரிய கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில், எலக்ட்ரானிக் மீட்டர், டிரான்ஸ்பார்மர் மற்றும் உதிரிபாகங்கள்  வைக்கப்பட்டு உள்ளன. இங்கிருந்து, மின்வாரிய உதவி பொறியாளர், அலுவலர்கள் போன்றோருக்கு தேவைப்படும் மின் சாதனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் குறிபிட்ட பணத்தை கட்டணமாக கேட்டு, கிடங்கின் நிர்வாகிகள் நிர்பந்திப்பதாகவும், பணம் தர மறுத்தால் பொருட்கள் இருப்பு இல்லை என கூறி திருப்பி அனுப்புவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் வேறு வழியின்றி பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே இதில் மின்வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு மின் இணைப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, மின்வாரிய கிடங்கிலிருந்து எலக்ட்ரானிக் மீட்டர், டிரான்ஸ்பார்மர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் இருப்பு வைக்கப்பட்டு, தேவை உள்ள இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிடங்கில், சிங்கிள் பேஸ் மீட்டருக்கு ரூ.50ம் 3 பேஸ் மீட்டருக்கு ரூ.100ம், டிரான்ஸ்பார்மருக்கு ரூ.2ஆயிரமும் கேட்கப்படுகிறது. கிடங்கின் நிர்வாகிகள் கேட்கும் பணத்தை கொடுக்க மறுத்தால், மின் சாதனங்கள் இருப்பு இல்லை என்று கூறுகின்றனர். மேலும், பணம் கொடுக்க மறுத்து, தகராறு செய்பவர்களுக்கு பழுதடைந்த மீட்டர்கள் மற்றும் உதிரிபாகங்களை கொடுத்து அனுப்புகின்றனர். எனவே, இவ்விஷயத்தில் மின் வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும், இதில் தொடர்புடையவர் மீது ரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: