பெரம்பலூரில் பராமரிப்பின்றி பாழாகும் தேசிய கல்மரப் பூங்கா!: தொல்லுயிர் படிமங்களை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

பெரம்பலூர்: திமுக ஆட்சியில் கட்டப்பட்டு ஆட்சி மாற்றத்தால் பராமரிப்பின்றி காணப்படும் தேசிய கல்மரப் பூங்காவை சீரமைத்து திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 1940ம் ஆண்டு கோணிப்பர்ஸ் என்ற பூக்காத இன தாவரம் கண்டறியப்பட்டது. இந்த வகை மரங்கள் 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆய்வில் தெரியவந்தது.

இந்த மரத்தையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பூமிக்கு அடியில் கிடைக்கும் தொல்லியலின படிமங்களை பாதுகாக்க கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகத்தோடு தேசிய கல்மரப் பூங்கா அமைக்கப்பட்டது. இதையடுத்து ஆட்சி மாற்றத்தால் அருங்காட்சியகம் 10 ஆண்டுகளாக திறக்கப்படாமல் கலையிழந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்களை புவியியல் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாகும். இதுகுறித்து அங்குள்ள மக்கள் தெரிவித்ததாவது, கடந்த 10 ஆண்டுகளாக தேசிய கல்மரப் பூங்காவும், பயணியர் மாளிகையும் திறக்கப்படாமல் உள்ளது. இதனை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உடனடியாக பூங்காவை சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பகுதி முழுவதும் நிறைய படிமங்கள் கிடைக்கின்றன. தொல்லியல் சார்ந்த படிமங்களும், புவியியல் சார்ந்த படிமங்களும் அதிகளவில் கிடைக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 1 மீட்டர் நீளமுடைய புதிய கல் மரத் துண்டு கிடைக்கப்பெற்றுள்ளது. இவை தற்போது திறந்தவெளி பாதையில் வைக்கப்பட்டுள்ளது. இதனை அருங்காட்சியகத்தில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.

Related Stories: