ஸ்டாலின் உள்பட 21 எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சென்னை: சட்டப் பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்கள் கடைகளில் காவல்துறை உதவியோடு விற்பனை செய்வதாகவும், அமைச்சர்கள், அதிகாரிகள் உடந்தையுடன் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.ஆனால் அதன்பின்னரும் குட்கா விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால், இதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21  திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டு சென்றனர்.

 இதுதொடர்பாக சட்டபேரவை உரிமை குழு எடுத்த நடவடிக்கையில் அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களும் 2017ம் ஆண்டு செப்டம்பர் 7ம்தேதி வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.துரைசாமி, திமுக எம்எல்ஏக்களுக்கு அனுப்பப்பட்ட உரிமை குழு நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த தடையை நீக்க கோரி சட்டபேரவை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவும் நிலுவையில் இருந்தது. இந்த வழக்குகள் பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்பட்டது. 2017ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்குகளில் தற்போதைய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய நாட்களில் இறுதி விசாரணை நடைபெற்றது.

 திமுக சார்பில் மூத்த வக்கீல்கள் சண்முக சுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் சட்ட பேரவை மற்றும் தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சிறப்பு அரசு வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆகியோரும் வாதிட்டனர்.  அப்போது, எம்எல்ஏக்களாக இருந்த ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் மரணமடைந்ததாகவும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வத்திற்காக நாங்கள் ஆஜராகவில்லை என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் திமுக தரப்பு வாதத்தையே தன் தரப்பு வாதமாகவும் ஏற்றுக் கொள்ளும்படி கு.க.செல்வம் தரப்பில் ஒரு கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து ஆகஸ்ட் 14ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

தீர்ப்பில், ‘‘இந்த வழக்கில் உரிமை மீறல் புகாருக்கான முகாந்திரம் இல்லாததால் மனுதாரர்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிடுகிறோம். சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக அடிப்படை ஆதாரங்கள் எதையும் பரிசீலிக்காமல் உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குட்கா பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தான் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்த தடை விதிக்கப்படவில்லை. உறுப்பினர்கள் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை அரசுக்கு தெரிவிக்கவே அவற்றை பேரவைக்குள் காண்பித்தனர். இதை உரிமை மீறல் குழு பரிசீலிக்காமல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே இதை ரத்து செய்கிறோம். உரிய அடிப்படை காரணங்களுடன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பலாம் என்று பரபரப்பு தீர்ப்பளித்தனர். இதனால் திமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பதற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: