கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகரில் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு: அதிமுக பிரமுகர் மீது போலீசில் புகார்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகரில் அதிமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி இடத்தை மீட்க வேண்டும், என பொதுமக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை மாநகராட்சி, 4வது மண்டலம், 41வது வார்டுக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சுண்ணாம்பு கால்வாய் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது கழிப்பறை இருந்தது. முறையான பராமரிப்பின்றி பாழடைந்து காணப்பட்ட இந்த கழிப்பறை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கழிப்பறை கட்டித்தர வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த 6 மாதங்களுக்கு முன், இந்த கழிப்பறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ஆனால், இதுவரை அங்கு புதிய கழிப்பறை கட்டவில்லை.

தற்போது, இந்த இடத்தை அதிமுக வடசென்னை மாவட்ட முக்கிய நிர்வாகி ஆதரவுடன் அப்பகுதியை சேர்ந்த அதிமுக இளைஞரணி நிர்வாகி ஆக்கிரமித்து, செங்கல், மணல் விற்பனை செய்ய உள் வாடகைக்கு விட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் மாநகராட்சியும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பொது கழிப்பறை இருந்த இடத்தை ஆளுங்கட்சி பிரமுகர் ஆக்கிரமித்து, உள் வாடகைக்கு விட்டுள்ளார். தற்போது இந்த பகுதியில் பொது கழிப்பறை இல்லாததால் இயற்கை உபாதைகளை கழிக்க சிரமப்படுகிறோம். எனவே, ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து அந்த இடத்தை மீட்டு அங்கு புதிய கழிப்பறை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: