கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தாம்பரம் நகராட்சி பணியாளர் மண்டை உடைப்பு - பரிசோதனை மேற்கொண்டதால் தாக்குதல்

செங்கல்பட்டு:  தாம்பரத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி பணியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் நகராட்சி சார்பாக ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழு, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சாமினா பந்தல் அமைக்கப்பட்டு பரிசோதனையானது நடத்தப்பட்டு வந்தது. அப்போது நகராட்சி ஊழியர் குமாரசாமி உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா பரிசோதனையானது நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் முகக்கவசம் அணியாமல் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்துள்ளார். இதனையடுத்து நகராட்சி பணியாளர்கள் தினேஷை தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் ஏன்? வெளியே வருகிறீர்கள். இவ்வாறு வருவது சுகாதார சட்டப்படி குற்றம் என கூறி அபராதம் கட்டுமாறு கேட்டுள்ளனர். இல்லையெனில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலிவுறுத்தியுள்ளனர். இதனை ஏற்காத தினேஷ் நகராட்சி அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் தினேஷ் அங்குள்ள பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து குமாரசாமியின் மண்டையில் அடித்துள்ளார். இதில் குமாரசாமியின் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் சண்டையை தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து பலத்த காயமடைந்த குமாரசாமியை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் தன்னை தாக்கியதால் இதுபோன்ற காயம் உருவாகியுள்ளதாக மருத்துவ குறிப்பேட்டில் குமாரசாமி பதிவித்துள்ளார். அதனையே புகாராக பெற்று காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தினேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மற்ற நகராட்சி ஊழியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: