அவசர பயன்பாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அனுமதி : முன்கள பணியாளர்களுக்கு, எல்லை அதிகாரிகளுக்கு தடுப்பூசி போட முடிவு!!

பெய்ஜிங் : அவசர பயன்பாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அனுமதி அளித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோர தண்டவம் ஆடுகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையும் கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் தொற்று, ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா வைரசுக்கு முடிவு கட்ட உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. அந்த வகையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலும் பல்வேறு நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து உள்ளன. இதில் கடந்த மாதம் 22-ந் தேதி அவசர பயன்பாட்டுக்கான தடுப்பூசி பரிசோதனையை சீனா தொடங்கியது.

சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்த இந்த தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு லேசான பக்க விளைவுகள் இருந்தாலும் காய்ச்சல் போன்ற குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏதும் இல்லை. ஆகவே அவசர பயன்பாடுகளுக்கு இந்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்திக் கொள்ள சீனா அனுமதி அளித்துள்ளது. குறைவான காலக்கட்டத்தில் தொற்றுக்கு ஆளாகும் அபாயத்தில் இருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தடுப்பூசி மேலாண்மை சட்டத்தின்படி, கடுமையான பொது சுகாதார அவசரநிலை ஏற்படும் போது, மருத்துவம் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணியாளர்கள், எல்லை அதிகாரிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு இந்த தடுப்பூசிகள் போடப்பட உள்ளன.

Related Stories: