திருநின்றவூர் பேரூராட்சியில் சாலையோரம் குவியும் கழிவுகள்: நோய் பரவும் அபாயம்

ஆவடி: திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால், சுற்றுசூழல், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் சரிவர அகற்றுவது கிடையாது. இதனால், சுற்றுசூழல், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “திருநின்றவூர் பேரூராட்சியில் சமீப காலமாக முக்கிய பிரதான சாலை மற்றும் தெருக்களில் உள்ள குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பல தெருக்களில் உள்ள தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகின்றன. மேலும், சில இடங்களில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இவ்வாறு சாலைகளில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் குப்பைகளால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். அகற்றப்படாத குப்பைகள் கழிவுநீர் வெளியேறும் கால்வாயில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. குப்பைகள் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் நோய் பரவும் அச்சத்தில் இப்பகுதியில் வசிப்போர் உள்ளனர். இதுகுறித்து, திருநின்றவூர் பொது நலச்சங்க நிர்வாகிகள் சார்பில் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறப்பட்டு உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித  நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, இப்பகுதியில் வசிப்போர் தொடர்ந்து சுகாதார கேட்டால் அவதிப்படுகின்றனர். கொரோனா போன்ற உயிர்கொல்லி நோய்கள் பரவி வரும் வேளையில், பேரூராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படாமல் உடனடியாக குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: