அண்ணா பல்கலை உட்பட உயர்க்கல்வி நிறுவனங்கள் தவணை முறையில் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும்: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகம், ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு உள்ள மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையேல், இந்த மாதம் 26ம் தேதிக்குள் அபராதத்துடன் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளதோடு, கட்டணம் செலுத்தாவிட்டால் ஆராய்ச்சி மாணவர்களின்  பதிவு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, உலக நாடுகள் கல்விக் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள் கட்டாய கட்டண வசூலிப்பில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்கு உரியதும், மனிதாபிமானம் அற்ற செயலுமாகும்.  

பெற்றோர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும், அரசியல் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், கல்விக் கட்டண குறைப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களும் குறைந்தபட்சம் தவணை முறையிலாவது கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும். கல்விக் கட்டணம் செலுத்த தாமதமானால் எந்தவிதமான அபராதத் தொகையையும் வசூலிக்க கூடாது என, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: