பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும்...இது நம்ம சென்னை!: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22ம் நாளை ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினமாக கொண்டாடி வருகிறோம். பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வரும் பல கோடி மக்களின் பல்வேறு கனவுகளில் சென்னைக்கு வர வேண்டும் என்ற கனவும் ஒன்று. தமிழகத்தின் பல மாவட்டங்களில் இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டால் உடனே வேலை தேட வேண்டும் என்றால் அவர்களுக்கு ஞாபகம் வருவது சென்னை தான். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் வசதியையும் கொடுத்து அவர்கள் தங்களுடைய சொந்த ஊர் சென்னை என்று சொல்லும் அளவுக்கு சென்னை அவர்களை மாற்றிவிடும். அதுதான் சென்னையின் மேஜிக்.

கொரோனா பரவல் காரணமாக சென்னையை விட்டு ஆயிரக்கணக்கானோர் வெளியேறினாலும் கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் சுவற்றில் அடித்த பந்துபோல் அவர்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்கு வருவது உறுதி. ஒவ்வொரு தமிழக இளைஞர்களுக்கும் முகவரியாய் இருந்து வருவது சென்னை என்பதும், சென்னையை நம்பினார் கைவிடப்படார் என்பது தான் உண்மையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று! கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும்.  இது நம்ம சென்னை!, என கூறியுள்ளார்.

Related Stories: