×

நோய் தீர்க்கும் பவளமல்லி

நன்றி குங்குமம் தோழி

இயற்கையான முறையில் சின்னச் சின்ன வியாதிகளுக்கு பக்க விளைவுகள் இல்லாத மருத்துவத்தையே பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்.  அவர்களுக்கு பவளமல்லி நல்ல தேர்வு என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். “கால நிலை மாற்றம் என்பதை இரு வகையாக பிரிக்கலாம்.  பருவகால மாற்றம். அதாவது குழந்தை பருவம், இளமை பருவம், முதுமை பருவம். இரண்டாவது தட்பவெப்பநிலை மாற்றம்.

இந்த கால நிலை மாற்றங்களில்தான் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல்கள் வந்திருக்கின்றன. இது போன்ற நேரங்களில்தான் புதிய புதிய  நோய்களும் உருவாகின்றன. இதை எதிர்கொள்ள பவளமல்லி தாவரம் சிறந்த மூலிகையாக இருக்கிறது. பவளமல்லி என்பது குறுமரம். இந்த குறுமரம்  வேர் முதல் இதழ்கள் வரை  பயனுடையது. இடுப்பு வலி பெண்கள் பலருக்கும் தீராத பிரச்சனை.  இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் பவளமல்லியின்  இதழ்களை கசாயம் வைத்து காலை, மாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் விரைவில் இடுப்பு வலி குணமாகும்.

சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து இருக்கும். அவர்கள் பவளமல்லியின் வேரை மென்று துப்பினாலே போதும். அதனுடைய வீக்கம் குறையும்.  பவளமல்லியின் இலைகளை எரித்து கரியாக்கி மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் பிரச்சனை தீரும்.  பவளமல்லி  இலையை தேநீராக்கி குடித்தால் எல்லா வித காய்ச்சலுக்கும் நல்ல மருந்தாக இருக்கும். கண்வலிக்கும் இந்த மருந்து பயன்படுகிறது.  சிலருக்கு தலையில் புழுவெட்டு ஏற்பட்டிருக்கும்.  

அதன் மீது பவளமல்லி இலைகளை தேய்த்தால் போதும். புழுவெட்டு மறைந்து முடி வளர்வதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சர்க்கரை நோய்  இருக்காது.  ஆனால் அதிகமாக சிறுநீர் கழிப்பார்கள்.  அவர்களுக்கு பவள மல்லியின் வேர், இலை, இதழ் எல்லாம் நல்ல பயன் கொடுக்கும். இது  சிறந்த கிருமி நாசினியாக பயன்படக்கூடியது. வயிற்று புழுக்கள் வெளியேறும், கீரிப் பூச்சிகள், நாடாப் புழுக்கள், நுண்கிருமிகளை வெளியேற்றும்  அற்புதமான மருந்தாகிறது. வயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகையாக பவளமல்லி  பயன்படுகிறது.

பவளமல்லியின் இலைகளில் செய்யப்படும் கசாயம், பருவ காலத்தில் ஏற்படும் படர்தாமரை நோயையும் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.  மனிதர்களுக்குத் தெரியாத பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்டுள்ளது.  பவளமல்லியை பெண்கள் தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை  தீரும். இத்தகைய மூலிகை குணமுடைய பவளமல்லி பல்வேறு வீடுகளில் அழகுப் பொருளாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய பயன்  அறிந்து மக்கள் எளிமையான முறையில் மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம்” என்கிறார்  பாலமுருகன்.

ஜெ.சதீஷ்

Tags :
× RELATED சக்கர நாற்காலியின் சரித்திர நாயகி