இன்று விநாயகர் சதுர்த்தி விழா பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்: சிறிய கோவில்களில் சிறப்பு வழிபாட்டுக்குஏற்பாடு

சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். அதன் பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கடற்கரை உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் வீடுகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி அரசு சார்பில் ேவண்டுகோள் விடுத்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜை பொருட்களை வாங்க நேற்று காலை முதல் திருமழிசை, மயிலாப்பூர், புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ஜாம்பஜார், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலைகளிலேயே பொரி, ஆப்பிள், ஆரஞ்ச், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு ஆகியவை விற்பனை செய்யப்பட்டன. விலை அதிகமாக இருந்த போதிலும் அதை பற்றி பொருட்படுத்தாமல் பொருட்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.  மாலையில் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது.மேலும் வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் களிமண்ணால் ஆன சிறிய வகை விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

அதனை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறிய கோவில்களில் சிறப்பு பூஜைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்காக சன்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: மக்கள் வருங்காலங்களில் செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ விநாயகர் அருள்புரியட்டும். இத்திருநாள் நம் வாழ்வில் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம் மற்றும் நல்ல உடல் நலத்தை வாரி வழங்கட்டும்.

முதல்வர் எடப்பாடி : கணங்களின் தலைவனான விநாயகப் பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.  இதுபோல தெலங்கானா கவர்னர் தமிழிசை மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: