திருச்சி விமான நிலையம் தனியார் மயத்திற்கு எதிராக கேரள முதல்வர் பினராயியை போல் தமிழக முதல்வர் குரல் கொடுப்பாரா?... ஆயிரக்கணக்கான ஊழியர்களின் குடும்பங்களை காப்பாரா என எதிர்பார்ப்பு

திருச்சி: திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவிப்பது போல், திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க தமிழக முதல்வர் எடப்பாழி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் அமிர்தசரஸ், ராய்ப்பூர், திருவனந்தபுரம், வாரணாசி, திருச்சி உள்பட நாடு முழுவதும் 12 விமான நிலையங்களை தனியார் மயமாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விமான நிலையங்களை அதானி குழுமம் பராமரிக்க உள்ளது.

ஏற்கனவே டெல்லி, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட சில விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்க அந்த மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேற்று மாலை திருவனந்தபுரத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கேரள அரசின் எதிர்ப்பை மீறி எந்த நிறுவனமும் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நடத்த முன் வராது என்றே கருதுகிறேன். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதமும் எழுதி உள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்க கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பது போல், திருச்சி விமான நிலையத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க மாட்டோம் என மத்திய அரசுக்கு தமிழக அரசு எதிர்ப்பு ெதரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி திருச்சி விமான நிலைய பணியாளர் சங்க வட்டாரத்தில் கேட்ட போது, ‘‘திருச்சி விமான நிலையத்தில் தற்போது நிரந்தரமாக அதிகாரிகள், பணியாளர்கள் 165 ேபர், ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 700 பேர் பணிபுரிகின்றனர். இதுதவிர சுங்கப்பிரிவு, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 350 பேர் பணியாற்றுகின்றனர்.

இங்கிருந்து துபாய், சார்ஜா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூர் ஆகிய இந்திய பெருநகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 2,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இதுதவிர சரக்கு விமான சேவையும் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் விமானங்கள் இயக்கத்தில் தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக திருச்சி 3ம் இடத்தில் உள்ளது. தமிழகத்திலேயே இந்த விமான நிலையம் தான் முதன் முதலாக தனியார் மயமாக உள்ளது. விமான நிலையம் தனியார் மயமாக்கப்பட்டால், இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறிதான். திருச்சி விமான நிலையம் கடந்த 3 ஆண்டுகளாக நல்ல லாபத்தில் செயல்பட்டு வருகிறது.

2017ம் ஆண்டில் மட்டும் ₹40 கோடி வருவாய் கிடைத்தது. எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்து வருவது போல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு பெயருக்கு கடிதம் எழுதி, முதல்வர் தனது கடமையைமுடித்து விடக்கூடாது என்றனர். திருச்சி விமான நிலைய வட்டாரத்தில் விசாரித்த போது, தனியார் மயமாக்கப்பட்டதற்கான அரசாணை எதுவும் இன்னும் வரவில்லை என்றனர்.

Related Stories: