நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ குழு விசாரணையை தொடங்கியது: ஆதாரங்களையும் மும்பை காவல்துறை ஒப்படைத்தது...!!!

மும்பை: இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய  நடிகர் சுஷாந்த் சிங் மரணம் வழக்கு தொடர்பாக சிபிஐ குழு விசாரணையை தொடங்கியது. இதில் அனைத்து ஆதாரங்களையும் மும்பை காவல்துறை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு பீகார் அரசு பரிந்துரைத்தது. சுப்ரீம் கோர்ட் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து 10 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து வியாழக்கிழமை இரவு மும்பைக்கு சென்றனர். இந்த குழுவில் தடயவியல் நிபுணர்களும் இடம்பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.10 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு இன்று விசாரணையை தொடங்கியது.  மூன்று குழுக்களாக பிரிந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். சுஷாந்த் சிங் வழக்கில் உள்ள அனைத்து ஆதாரங்களையும் மும்பை காவல்துறை வெள்ளிக்கிழமை சிபிஐ சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைத்தது. சிபிஐ குழு பாந்த்ரா காவல் நிலையத்தில்  இன்று ஆதாரங்களை சேகரித்தது.

பதிவு செய்யப்பட்ட 56 அறிக்கைகள், தடயவியல் அறிக்கைகள் மற்றும் ஸ்பாட் பஞ்சனாமா அறிக்கையை மும்பை காவல்துறை இன்று சிபிஐக்கு ஒப்படைத்தது. மேலும், அறிக்கைகளுடன், சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது மூன்று மொபைல் போன்கள் மற்றும் லேப்டப்  ஆகியவை ஒப்படைக்கபட்டது. சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை காவல்துறையினர் சேகரித்த மற்ற சான்றுகள், அவரது உடல் தொங்கிய நிலையில் காணப்பட்டபோது அவர் அணிந்திருந்த உடைகள், அவரது படுக்கையில் இருந்த போர்வை மற்றும் பெட்ஷீட், அவர் கடைசியாக வைத்திருந்த குவளை ஆகியவை அடங்கும் மொபைல் சிடிஆர் பகுப்பாய்வு, பாந்த்ரா போலீசாரின் வழக்கு நாட்குறிப்பு,

ஜூன் 13 முதல் ஜூன் 14 வரை கட்டிடத்தின் சிசிடிவி பதிவு ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டது. சுஷாந்த் மரணமடைந்து சடலமாக கிடந்ததை முதலில் பார்த்த வீட்டு சமையல்காரர் நீரஜிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். சுஷாந்த் இறந்ததும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்த பொருட்களை சுஷாந்தின் உறவினர்கள் பீகாருக்கு எடுத்துச்சென்றதால் தடயங்கள் கிடைக்காத சூழல் வந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

Related Stories: