திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் சென்னையில் காலமானார்: ஆணிவேர்களில் ஒருவரை இழந்து பரிதவிப்பதாக மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நேற்று சென்னையில் காலமானார். இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒருவரை இழந்து பரிதவிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான அ.ரகுமான்கான்(76), சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சுபேர்கான், ரியாஸ்கான் என்ற 2 மகன்கள் உள்ளனர். அண்மையில் ரகுமான் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து வீட்டு தனிமையில் இருந்த அவருக்கு ேநற்று காலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘ரகுமான்கான் மறைவெய்திவிட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்கும் பெரும் வேதனைக்கும் உள்ளாகி நிற்கிறேன். கனத்த இதயத்துடன்-அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களுடனான ‘ஆன்லைன்’ ஆலோசனையில் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது இணைப்பு துண்டித்துப் போனது;

ஆனாலும் எனது ‘வீடியோ காலில்’ தனியாக வந்து பேசி, எனக்கு கட்சி தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கி-தம்பிக்கு, பாசம் நிறைந்த “அண்ணனாக” என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தை - “தம்பி, உங்கள் உடல் நலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நலமாக இருப்பதுதான் இன்று இந்த நாட்டுக்கு இப்போது தேவை” என்று பிறப்பித்த அன்புக் கட்டளை தான்! பதிலுக்கு நானும் அவரிடம், “அண்ணே! நீங்களும் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சிறுபான்மைச் சமுதாயத்திற்கு மட்டுமின்றி- திமுகவிற்கும், தமிழக மக்களுக்கும் நீங்கள் மிகவும் முக்கியம்” என்று கூறினேன்.

அந்த உரையாடலின் உணர்ச்சிப் பெருக்கில் அவர் கண் கலங்கிய காட்சியைக் கண்டேன். ஆனால் அவர் இன்று என்னைக் கண்ணீர் மல்க வைத்து விட்டு சென்று விட்டார் என்பதை என் மனம் அறவே ஏற்க மறுக்கிறது. இந்த இயக்கத்தின் ஆணிவேர்களில் ஒருவரான அண்ணனை இழந்து பரிதவிக்கிறேன்; ரகுமான்கான் குடும்பத்திற்கும்- உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’  என கூறியுள்ளார். ரகுமான்கான் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை, மதிமுக பொது செயலாளர் வைகோ, தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோரும் இரங்கள் தெரிவித்துள்ளனர். திமுக நிகழ்ச்சிகளும் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: