திண்டுக்கல் அருகே புது முயற்சியாக ஏ.டி.எம். பால் மையம்: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கண்டுபிடித்து அசத்தல்..!!!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஊரடங்கால் வேலை இழந்தவர் ஏ.டி.எம். பால் மையம் ஒன்றினை உருவாக்கியுள்ளார். குளத்தூரை சேர்ந்த போடிசாமி என்பவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த அவர், சொந்தமாக தொழில் தொடங்க எண்ணினார். இதற்காக நாட்டுமாடு பால்பண்ணையை உருவாக்கினார். தொடர்ந்து, பாலை விற்பனை செய்வதற்கு ஏதுவாக  புதிய முயற்சியாக ஏ.டி.எம். இயந்திரம் வடிவில் பால் விநியோகம் செய்து வருகிறார்.

 திண்டுக்கல் நாயக்கர் புதுத்தெரு, கோவிந்தாபுரம் பகுதிகளில் இவரது ஏ.டி.எம் பால் பண்ணை தொடங்கப்பட்டுள்ளது. எந்நேரமும் பால் கிடைக்கும் இந்த மையத்தில் நெகிழி பைகள் தவிர்க்கப்பட்டது கூடுதல் சிறப்பாகும். பால் ஏ.டி.எம். ஒன்றை உருவாக்கியுள்ள போடிசாமி, அதன் மூலம் ரீசார்ஜ் செய்து பால் வாங்கி செல்லும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் எந்த அளவிலும் ரூபாய்க்கு ஏற்ப பால் பெறுவதற்கான வசதியும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்கென சிறப்பு ஏ.டி.எம் கார்டும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முன்கூட்டியே பணம் செலுத்தி 24 மணிநேரமும் ஏ.டி.எம் கார்டை வைத்தும் பால் பெற்றுக்கொள்ளலாம். ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் புதிய பால் ஏ.டி.எம். முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து போடிசாமி தெரிவித்ததாவது, தற்போது தயாரித்துள்ள இந்த ஏ.டி.எம். பால் மையத்தில் தூய்மையான பால் நிரப்பப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிக்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தில் எப்போது வேண்டுமானாலும் பால் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டார்.

Related Stories: