மதுரை என்பது மன்னர் ஆண்ட பூமி: மதுரையில் 2வது தலைமை செயலகம் அமைக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து.!!!

சென்னை: தமிழகத்தின் 2வது தலைநகரம் எங்கே அமையும் என்பது பெரும் விவாதப்பொருளாகி வரும் நிலையில், மதுரையில் 2வது தலைமை செயலகத்தை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 2வது தலைநகரை மதுரையில் அமைக்க வேண்டும் என்று அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் பிள்ளையார் சுழியிட்டு விவாதத்தை துவக்கி வைத்திருக்கிறார்.

அதற்கு அமைச்சர் செல்லூர் ராஜுவும் ஆதரவு தெரிவித்தார்.  இதற்கு வலு சேர்க்கும் வகையில் மதுரையில் 2வது தலைமை செயலகம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். ஆனால் 2வது தலை நகரை திருச்சியில் தான் அமைக்க வேண்டும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குரல் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்ததாவது, தமிழகத்தின் வளர்ச்சி அன்றிருந்த மக்கள் தொகையை விட தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. 8 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் தென்பகுதியான மதுரையில் ஒரு தலைநகரம் உருவானால் தென்மாவட்ட மக்களுக்கு வசதி, வாய்ப்பாக இருக்கும். மதுரை என்பது மன்னர் தலைநகரமாக கொண்டு ஆண்ட பூமி. ஆகவே மதுரையை தலைநகரமாக கொண்டு ஒரு தலைமை செயலகம் அமைந்தால் அது இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயன்பெறக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.

தமிழகத்தின் 2வது தலைநகரம் மதுரையா? திருச்சியா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், இவை இரண்டும் வேண்டாம் தஞ்சையில்  தான் அமைக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் தான் 2வது தலைநகரத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முளைத்துள்ளது.

Related Stories: