கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

புதுடெல்லி: கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் டெல்லி அருகேயுள்ள ஹரியானாவின் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் சில தினங்களுக்கு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் கடந்த 14ம் தேதியன்று அமித்ஷா தெரிவித்திருந்தார். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணப்படுத்த உதவிய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு தனது நன்றியையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்பு தொற்று காரணமாக, அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் முடிவுகளில் அவருக்கு மார்பு தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமித்ஷா, தற்போது  எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாவின்(மார்பு நிபுணர்) கண்காணிப்பில் உள்ளார். எய்ம்ஸில், அமித்ஷா குறைந்தது 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: