அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை வருமான வரி படிவத்தில் குறிப்பிடுவது அவசியமா? அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகள் குறித்து வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.20,000க்கு மேல் உள்ள ஓட்டல் பில், ரூ.1 லட்சத்துக்கு மேல் வாங்கப்படும் நகைகள், மார்பிள், ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் போன்றவற்றை வருமான வரித்துறை கண்காணிக்கும் என நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இத்தகைய உயர் மதிப்பிலான பரிவர்த்தனைகளை வருமான வரி தாக்கல் படிவத்தில் குறிப்பிடுவது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகள் குறித்து கட்டாயம் குறிப்பிடும் வகையில் வருமான வரி படிவத்தில் எந்த மாற்றங்களும் செய்யவில்லை. அதிக மதிப்பிலான பரிவர்த்தனை செய்யும் சிலர், தங்கள் ஆண்டு வருவாய் 2.5 லட்சத்துக்கு கீழ் என காண்பித்து, கணக்கு தாக்கல் செய்வதில்லை. இவர்களை கண்டுபிடிக்க அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனை விவரங்களை பகிர்வது உதவுகிறது. அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளில் வணிக வகுப்பு விமான பயணங்கள், வெளிநாட்டு பயணங்கள், சொகுசு ஓட்டல்கள், அதிக பள்ளி கட்டணம் உள்ளிட்டவை அடங்கும். பலர் தானாக முன்வந்து வருவாய் விவரங்களை சமர்ப்பிக்கின்றனர். இருப்பினும் மூன்றாம் நபர்கள், நிறுவனங்கள் மூலம் பகிரப்படும் தகவல்கள், வரி ஏய்ப்பை கண்டறிய முக்கிய ஆதாரமாக விளங்குகிறது என்றார்.

Related Stories: