டுட்...டுட்...டுட்...சத்தம்; கிராமத்து மாணவர்கள் உற்சாகம் வந்தாச்சு புல்லட் வாத்தியார் லவுட் ஸ்பீக்கரில் பாடம்: ஆன்லைன் கல்வியில் இது புது புரட்சி

புதுடெல்லி: புல்லட் பைக் சத்தம் வந்து விட்டால் போதும்; கிராமத்தில் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் உஷாராகி விடுகின்றனர். கையில் நோட்டு, புத்தகங்கள் சகிதம் வீட்டு வாசலில் உட்கார்ந்து விடுகின்றனர் மாணவர்கள். லவுட் ஸ்பீக்கரில், ஆசிரியர்கள் ஒவ்வொருவராக பாடம் நடத்துவதை குறிப்பெடுக்கின்றனர். முடிந்தது 5 வகுப்புக்கான பாட பயிற்சி. புல்லட் பறக்கிறது அடுத்த கிராமத்தை நோக்கி. என்ன வியப்பாக இருக்கிறது தானே. கல்வியின் கஷ்டம் நகரத்தில் தெரியாது; கிராமங்களில் தான் வெளிப்படும். மாணவர்கள் கல்விக்காக பல கிமீ நடந்து வந்தெல்லாம் பள்ளிக்கு வருவதை அறிந்திருக்கிறோம்.

கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடி 5 மாதமாகி விட்டது; ஆன்லைனில் வகுப்புகள் என்று அறிவிப்போடு, கிராமங்களில் மாணவர்கள் எப்படியெல்லாம் தவிப்பார்கள் என்று அரசோ, அதிகாரிகளோ கவலைப்பட நேரமில்லை. வேறு யாருக்கு தான் கவலை; தினம் தினம் ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் நேர்மையான, சம்பளத்துக்கு உழைக்காத ஆசிரியர்கள் தான். அவர்கள் தான் பல வழிகளை தேடி, கிராமத்து மாணவர்களுக்கு புரட்சிகரமாக ஆன்லைன் கல்வியை புதுமையான முறையில் அமல்படுத்தினார்கள். அவர்களுக்கும் மன நிறைவு; மாணவர்களுக்கும் அளவில்லாத திருப்தி. பெற்றோர்களுக்கு பெரும் நிம்மதி. இதோ சில மாநிலங்களில் நடக்கும் புரட்சிகர ஆன்லைன் பாடப்பயிற்சி: புல்லட் வந்தாச்சு

* ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் தும்காட்டி பகுதியில் உள்ளது அரசு நடுநிலை பள்ளி; இங்கு 264 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 60 பேருக்கு மட்டும் தான் ஆன்லைன் வசதி உள்ளது. மற்றவர்கள் கிராமங்களில் இருந்து வருகின்றனர்; அவர்களுக்கு  எந்த ஆன்லைன் வசதியும் இல்லை. பார்த்தார் தலைமை ஆசிரியர் ஷியாம் கிஷோர் காந்தி; கிராமங்களில் மாணவர்கள் வீடுகளுக்கு அருகே ஒலிபெருக்கிகளை பொருத்தச் சொன்னார். புல்லட் பைக்கில் அவர் தினமும் காலை கிளம்பி விடுவார்; கூடவே 5 ஆசிரியர்களையும் அழைத்து செல்வார்; கிராமத்தில் புல்லட் பைக் சத்தம் வந்தாலே, ‘வாத்தியாருங்க வந்துட்டாங்க’ என்று சொல்லி, மாணவர்களும், பெற்றோர்களும் அவரவர் வீட்டு வாசலில் தயாராகி விடுவர். ஒவ்வொரு ஆசிரியராக மைக்கில் பாடம் சொல்ல, லவுட் ஸ்பீக்கரில் ஒலிபரப்பாகும். மாணவர்கள் பாடங்களை குறித்து கொள்வர். எல்லா ஆசிரியர்களும் பாடம் நடத்தி முடித்ததும் புல்லட் பைக் அடுத்த கிராமத்துக்கு கிளம்பி விடும். இந்த ஐடியா சூப்பராக இருக்கவே, மாவட்ட கல்வி நிர்வாகம், பல கிராமங்களில் இது போன்ற புரட்சிகர ஆன்லைன் கல்வி வசதியை ஏற்படுத்தி உள்ளது.

பெண் கலெக்டரின் புதுமை

* அசாம் மாநிலத்தில் அடுத்தடுத்து இரு முறை புயல் மழை வெள்ளம்; குறிப்பாக கோல்பாரா மாவட்டம் முழுக்க புரட்டிப்போட்டு விட்டது. பெண்  கலெக்டர் வர்னாலி தேகா புதுமையாக ‘மிஷன் தரங்க்’ என்ற திட்டத்தை துவக்கினார். கல்லூரியில் படித்த மாணவர்கள், 1500 ஆசிரியர்களை தயார் செய்தார். மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் போன் இருந்தது. மற்றவர்களுக்கு ரேடியோ மூலம் பாட பயிற்சி துவங்கியது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த தரங்க் திட்டம் மிகவும் பயனளித்தது; தினமும் ஆசிரியர்களும் போனில் அழைத்து பேசுவர். பாட சந்தேகங்களை தீர்ப்பர். ரேடியோவிலும் பாடம் நடத்தப்பட்டது. பெண் கலெக்டரின் திட்டம் முழு வெற்றி அடைந்து வருகிறது.

கிராமவாசியே தூதர்கள்

* சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சேஷகிரி ராவ்; யுனிசெப் - ஐநா அமைப்பின் பிரதிநிதியாக இருந்தவர். ஆன்லைன் வகுப்புகளை கிராமங்களில் சேர்க்க அவர் புதுமையான ‘சிக்‌ஷ் மித்ரா’ திட்டத்தை அமல்படுத்தினார். இதற்கு பல கிராமங்களை சேர்ந்த படித்த இளைஞர்களை சேர்த்தார். அவர்கள் கையில் பாடபுத்தக கையேடுகள் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் என்னென்ன பாடங்கள் நடத்த வேண்டும் என்பதற்கான வீடியோக்களும் தரப்பட்டன. பாகாட் கிராமத்தை சேர்ந்தவர் சேடன் படேல்; வயது 25; தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருபவர். இவர் பாகாட் கிராமத்து கல்வி தூதர். தினமும் ஒவ்வொரு பாடமாக வீடியோவை போட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்துவார். பின்னர், சனிக்கிழமையில்  வீடியோ கேம் விளையாட்டும் உண்டு. இப்போது கிராமத்து செல்ல வாத்தியாராகி விட்டார் சேடன் படேல்.

Related Stories: