முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 2-ம் ஆண்டு நினைவு தினம்: டெல்லி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை.!!!

டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லி உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமரும்,  பாஜ மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதியினருக்கு டிசம்பர் 25, 1924 அன்று  பிறந்தார்.

அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்ற வாஜ்பாய் 1939-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அதில் தன்னை இணைத்துக் கொண்டார். 1996 ஆம் ஆண்டு மிகக் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார்.  பின்னர் மார்ச் 19-ஆம் தேதி 1998-ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக 2009-ம் ஆண்டில் பொது வாழ்க்கையிலிருந்து வாஜ்பாய் விலகினார். இதற்கிடையே, வயது  மூப்பினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்ட வாஜ்பாய் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி வாஜ்பாய் காலமானார்.

இந்நிலையில் இன்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில்  உள்ள சதைவ் அடல் - அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை  குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா, வாஜ்பாய் மகள் நமீதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிஹாரிகாமற்றும் பாஜக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: