கொரோனாவிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய 55 வயதுக்கு மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு விருது: மாநகராட்சி ஆணையர் வழங்கினார்

சென்னை: சென்னை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தினசரி வீடுவீடாக சென்று ஆய்வு நடத்துவது, காய்ச்சல் முகாம் நடத்துவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி தருவது உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சியில் 400க்கு மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டனர்.

இதன்படி தற்போது 300க்கு மேற்பட்டவர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். குறிப்பாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய 55 வயதுக்கு மேறப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ேநற்று நடந்த சுதந்திர தின விழாவில் விருதுகளை வழங்கினார்.  இதன்படி தலைமை பொறியாளர் நந்தக்குமார், வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டி பாபு, மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர் உமாபதி, முதுநிலை சட்ட அலுவலர் ஜேக்கப் ராஜன் பாபு ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வழங்கினார். இதேபோன்று சிறப்பாக பணியாற்றிய மாநகர நல அலுவலர் ஜெகதீசனுக்கும் விருது வழங்கினார்.

இதை தவிர்த்து மண்டல வாரியாக சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு மருத்துவ அலுவலர், உதவி பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரி வசூலிப்பவர்கள், தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: