10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் 10 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி:நட்டாற்றில் தவிக்க விட்ட பள்ளிக்கல்வித்துறை

வேலூர்: தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்த 10 ஆயிரம் பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள  நிலையில், அவர்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை நட்டாற்றில் விட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர். தமிழகத்தில் கடந்த மார்ச்  மாதம் பிளஸ்2, பிளஸ்1 தேர்வுகள் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியானது. அதற்குள் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து பள்ளி,  கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறிய  தனித்தேர்வர்கள் அத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்து தேர்வுக்கூட நுழைவு சீட்டையும் இணையதளம் மூலம் பெற்றிருந்தனர்.

இவ்வாறு 10ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த தனித்தேர்வர்கள் பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டும் ஏறத்தாழ 10 ஆயிரம் பேர் இருக்கலாம் என்கின்றனர் கல்வியாளர்கள். இந்த நிலையில் பல்வேறு  தரப்பில்  இருந்தும் எழுந்த கோரிக்கையின் அடிப்படையில் பள்ளிகளில் இருந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து மாணவர்களும்  தேர்ச்சிபெற்றதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. மேலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான  மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை கொண்டும், வருகை பதிவேட்டின் அடிப்படையிலும் கணக்கிட்டு மதிப்பெண் பட்டியல்  தயாரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

ஆனால், ஏற்கனவே 10ம் வகுப்பு தேர்வில் தவறி, அதற்கான மறுத்தேர்வை எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் 10 ஆயிரம் பேரின்  நிலை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது வேதனையை தருகிறது.  குறிப்பாக ஓரிரு பாடங்களில் தங்கள் தேர்ச்சியை  தவறவிட்ட மாணவர்கள் அந்த பாடங்களை எழுதி தேர்ச்சி பெற்று மேல்நிலை கல்வியோ அல்லது ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரி போன்றவற்றிலோ  தங்கள் கல்வியை தொடரவிருந்த நிலையில்  அவர்கள் நட்டாற்றில் விடப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Related Stories: