சுதந்திர தின விழா கொண்டாட்டம்கவர்னர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தையொட்டி, கவர்னர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித்: நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேறச் செய்திட்ட அனைவருக்கும் நமது நன்றியை வெளிப்படுத்துவோம். நம் மக்கள் மீதான கரிசனம், அக்கறை நம் இதயங்களில் ஆதிக்கம் செலுத்திட வாழ்த்துகிறேன். எடப்பாடி பழனிசாமி (தமிழக முதல்வர்):  தாய் திருநாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றி, வல்லரசு நாடாக உயர்த்திடவும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திடவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை சாத்தியமாகும் நிலை உருவாக்க உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்): மகாத்மா காந்தி தலைமையில் விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களை போற்றுகிற வகையில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவோம். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்): நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து வகுப்புவாத, மதவெறி சக்திகளை முறியடிக்க சுதந்திர தினத்தில் உறுதி ஏற்போம்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): சுதந்திரம் என்பது வெறும் சொல் அல்ல; வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அதை உறுதிப்படுத்துவதற்கான பெரும் போராட்டத்தை நடத்திட இந்நாளில் சூளுரைப்போம். எல்.முருகன் (தமிழக பாஜ தலைவர்): அனைவரையும் அரவணைத்து, அனைவரின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபடும் நமது பிரதமர் அவர்களின் அயராத உழைப்பில் தேசத்தினை உயர்த்திட நாமும் தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று இந்த சுதந்திர தினத்தன்று உறுதி கொள்வோம். ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): வருங்காலம் நோயில்லாத நாடாக, பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், கல்வியிலும், தொழில்துறையிலும், தன்னிறைவுப் பெற்ற நாடாக விளங்க வேண்டும். அதற்கு இயற்கையும், இறைவனும் துணை நிற்கவேண்டும்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): ஒரு தமிழனாக நம்முடைய தனித்துவமான உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், இந்தியனாக உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்றிடவும் சுதந்திர திருநாளில் உறுதி ஏற்றிடுவோம். சரத்குமார் (அஇசமக தலைவர்): நமக்கிருக்கும் மாபெரும் சவால், இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதார பின்னடைவை சீர்செய்வதாகும். அதற்கு இந்தியரான நாம் அனைவரும் ஒன்றுபட்டு தேசத்தில் உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சியில் முழுவீச்சுடன் ஈடுபட்டு, பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளமாக செயல்பட வேண்டும்.

நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர்): நாட்டில் உண்மையான ஜனநாயகம் தழைத்திடவும், முன்னோர்கள் கட்டியெழுப்பிய பன்முகத் தன்மையை பேணிக்காக்கவும் இந்நாளில் சபதமேற்போம்.

இதேபோல், தமுமுக நிறுவனர் அனிபா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஆ.ெஹன்றி,  தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, கோகுல மக்கள் கட்சி மாநில தலைவர் எம்.வி.சேகர், மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன், சமத்துவ மக்கள் கழக தலைவர் நாராயணன் ஆகியோரும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Related Stories: