24 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்காமல் சுதந்திர போராட்ட வீரரை அலைக்கழிக்கும் அரசு

பெரம்பூர்: வியாசர்பாடி பி.பி.காலனி 7வது தெருவை சேர்ந்தவர் எஸ்.கபூர் (99), சுதந்திர போராட்ட வீரர். இவருடன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் தற்போது ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஆனால், கபூருக்கு மட்டும் ஓய்வூதியம் கிடைக்காததால், கடந்த 1997ம் ஆண்டு முதல் இதற்காக போராடி வருகிறார். இவருக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளது. அதன்பேரில் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு 2014ம் ஆண்டு பெரம்பூர் புரசைவாக்கம் வட்டாட்சியர் இவரை நேரில் சந்தித்து அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து கலெக்டருக்கு அனுப்பி வைத்தார். 2015ம் ஆண்டு மாநில சீராய்வு குழு கூட்டத்தில் அவரது கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் மூலம் கபூருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2018ம் ஆண்டு தலைமை செயலகத்தில், “உங்களது பைல் உள்ளது.

கடிதம் வரும் கடிதம் வரும்போது நேரில் வாருங்கள்” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று வரை அவருக்கு எந்த கடிதமும் வரவில்லை. சென்னை கலெக்டராக இருந்த சுந்தரவல்லியிடம் இவர் இதுபற்றி முறையிட்டபோது, நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் தொலைந்துவிட்டது, மீண்டும் சமர்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மீண்டும் தனது ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளார். ஆனாலும், பயனில்லை. இதுகுறித்து சுதந்திர போராட்ட வீரர் கபூர் கூறுகையில், ‘‘நான் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை எனக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. தற்போது 99 வயது ஆகிறது. இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்பேன் என தெரியவில்லை. வருகிற 74வது சுதந்திர தினத்திலாவது  எனக்கு விடிவு காலம் பிறக்கும் என நம்புகிறேன்,’’ என்றார்.

* தொடரும் அவலம்

வியாசர்பாடியை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் காந்தி (89) என்பவர் தனக்கு ஓய்வூதியம் வழங்காதது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இதை விசாரித்த நீதிபதிகள், மனுதாரருக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும், இவ்வளவு நாட்களாக இவரை அலைகழித்ததற்காக கடும் கண்டனமும் தெரிவித்தனர். மேலும், இனி இதுபோன்று நடக்கக்கூடாது என கண்டித்தனர். அவ்வாறு இருந்தும் சுதந்திர போராட்ட தியாகிகள் இன்று வரை அழைக்கப்பட்டு வருவது தொடர்கிறது.

Related Stories: