தங்கம் விலை மேலும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.224 குறைந்தது: தொடர்ந்த 5 நாட்களில் ரூ.2740 வீழ்ச்சி; இன்னும் விலை குறைய வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.224 குறைந்தது. தொடர்ந்து 5 நாட்களில் மட்டும் ரூ.2,740 அளவுக்கு விலை குறைந்துள்ளது. இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக தங்கத்தில் முதலீடு உலக அளவில் அதிகரித்தது. இதனால், தேவை அதிகரித்து தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. அதுவும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே போனது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்கு முந்தைய நாளான மார்ச் 23ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை கிராமுக்கு ரூ.1,464க்கும், சவரனுக்கு ரூ.11,712 உயர்ந்தது.

கடந்த 7ம் தேதி ஒரு கிராம் ரூ.5,416க்கும் சவரன் ரூ.43,328க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. இப்படியே விலை உயர்ந்தால் தங்கம் சவரன் ரூ.50,000ஐ கடக்கும் என்றும் கணிக்கப்பட்டது. இந்த விலை ஏற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் கடந்த 8ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கி உள்ளது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.43,080, 10ம் தேதி ரூ.42,920, 11ம் தேதி ரூ.41,936க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,104க்கும், சவரன் ரூ.40,832க்கும் விற்கப்பட்டது.

நேற்றும் 5வது நாளாக தங்கம் விலை குறைந்தது. கிராமுக்கு ₹28 குறைந்து ஒரு கிராம் ரூ.5076க்கும், சவரனுக்கு ரூ.224 குறைந்து ஒரு சவரன் ரூ.40,608க்கும் விற்கப்பட்டது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.2740 அளவுக்கு குறைந்துள்ளது. கிடு,கிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை சற்று குறைந்து வருவது நகை வாங்குவோரை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது. ஆவணி மாதத்தில் அதிக அளவில் திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை குறைந்து வருவது மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை குறையும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், “ தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்வை சந்திக்கும் போது, சின்ன “கரெக்சன்” வரும். அதாவது சின்ன மாற்றம் ஏற்படும். அதே போல தான் தங்கம் விலை குறைந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்கள் வரை தங்கம் விலை குறையும். அதன் பிறகு தங்கம் விலை மறுபடியும் உயரும் “ என்றார்.

Related Stories: