தமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கொரோனாவுக்கு 9 நாளில் 950 பேர் பலி: 5,835 பேருக்கு பாசிட்டிவ்; 5,146 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மட்டும் 119 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 5,835 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 9 நாளில் சுமார் 950 பேர் வரை சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று 67,275 பரிசோதனைகள் செய்யப்பட்டதில் 5,835 பேருக்கு தொற்று உறுதியானது. மாநிலத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஆண்கள் 1,93,226. பெண்கள் 1,27, 100. 29 திருநங்கைகள் அடங்குவர். தமிழகத்தில் நல்ல ஒரு திருப்பமாக தினமும் குணமடைவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று மட்டும் 5146 பேர் குணமடைந்தனர்.

ஒட்டுமொத்தமாக குணமானவர்களின் எண்ணிக்கை 2,61,456. சிகிச்சையில் உள்ளவர்கள் 53,449 பேர். எதிர்பாராத விதமாக நேற்று மட்டும் 119 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 38 பேரும், அரசு மருத்துவமனையில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 18 பேர், செங்கல்பட்டு, கோவை, நெல்லையில் தலா 7 பேர், காஞ்சிபுரம், கன்னியாகுமரியில் தலா 6 பேர், கடலூர், மதுரை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 5 பேர், புதுக்கோட்டை, தென்காசி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேர், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராணிப்பேட்டை, திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர், விழுப்புரம், வேலூர், திருவாரூர், திருப்பத்தூர், சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்று மொத்தம் 119 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,397 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: