பிடெனுடன் நடந்த முதல் பிரசாரத்திலேயே டிரம்ப்பை `ரவுண்டு’ கட்டிய கமலா: நடத்தை, நிர்வாக செயல்திறன் பற்றி கடும் விமர்சனம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் உடன் நடத்திய முதல் தேர்தல் பிரசாரத்திலேயே, டிரம்ப்பை ஒரு பிடி பிடித்து விட்டார். அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் களத்தில் உள்ளார். இந்நிலையில்,இவர் தன்னுடன்  இணைந்து போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளராக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த, கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிசை நேற்று முன்தினம் தேர்வு செய்தார். இதையடுத்து, அமெரிக்க தேர்தல் களம், சூடு பிடித்துள்ளது.

துணை அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், பிடெனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரில் இருக்கும் பள்ளியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கமலா, அவருடன் இணைந்து பங்கேற்றார். இதில்,பிடென் பேசுகையில், ‘‘அதிபர் வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தில் என்னை கடுமையாக விமர்சித்தவர் கமலா. ஆனால், தேர்தலில் டிரம்ப்பை வீழ்த்துவதற்கு அவரை போன்ற துணிச்சல்மிக்க பெண்ணின் உதவி தேவை என்று கருதினேன். அதனால், அவரை துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தேன். தொற்று, நலிவடைந்த பொருளாதாரம், பல ஆண்டுகளாக கனன்று கொண்டிருக்கும் இனவெறி ஆகியவற்றை எதிர்த்து போராடும் தைரியமிக்கவர் கமலா. கண்டிப்பு மிக்கவராக இருந்தாலும் அவரது அனுபவம், நடுத்தர வகுப்பு மக்களுக்காக போராடும் குணம் நாட்டின் முதுகெலும்பாக துணை நிற்கும்,’’ என்றார்.

இதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் பேசியதாவது:

முதல் கருப்பின அதிபர் ஒபாமாவுடன் துணை அதிபராக பணியாற்றி பிடென், தன்னுடன் துணை அதிபராக பணி புரிய முதல் கருப்பின பெண்ணாக என்னை தேர்வு செய்துள்ளார். பிடெனும் நானும் தேர்ந்தெடுக்கப்பட்டால், லட்சக்கணக்கான வேலை வாய்ப்பை உருவாக்குவோம். பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராடுவோம். நீதித்துறை மூலம் இனவெறியை ஒழித்துக்கட்ட, ஜான் லீவிஸ் வாக்கு உரிமை சட்டத்தை அமல்படுத்துவோம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பும் எபோலா தொற்று இருந்தது. அப்போது ஒபாமாவும், பிடெனும் தங்களது கடமையை சரிவர செய்தனர். அமெரிக்காவில் இரண்டு பேர் மட்டுமே எபோலாவுக்கு பலியாகினர். இதுவல்லவா நிர்வாக திறமை. டிரம்ப்பின் நிர்வாக திறமையின்மைக்கு அவர் கொரோனாவை கையாளும் விதமே சாட்சி.

உலக நாடுகள் அறிவியலை பின்பற்றும் நிலையில், டிரம்ப் கொரோனா அதுவாக போய்விடும் அற்புதம் நடக்கும் என்று நம்பி கொண்டிருக்கிறார். நிபுணர்களை விட தனக்கு எல்லாம் தெரியும் என்ற அவரது மனோபாவம் காரணமாகவே, தொற்று அதிகமானது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கந்தலாகி விட்டது. உலக நாடுகளிடையே அமெரிக்காவின் மதிப்பு சுக்கு நூறாகி விட்டது. இந்த தேர்தல் டிரம்ப்பையும், பென்சையும் வீழ்த்த வேண்டும் என்பதற்கானதல்ல. மாறாக, புதிய அமெரிக்காவை மீண்டும் கட்டி எழுப்புவதற்கானது. இதனை பிடெனும் நானும் சிறப்புற செய்வோம். இவ்வாறு கமலா பேசினார்.

* இந்திய அமைப்பினர் மகிழ்ச்சி

அமெரிக்கா வாழ் இந்திய முஸ்லிம், சீக்கியர் அமைப்புகள் கமலா துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது குறித்து கூறுகையில், ``அமெரிக்காவின் இரண்டாவது மிகப் பெரிய பொறுப்புக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா தேர்வானது குறிப்பிடத்தக்க வெற்றியாகும். இது கருப்பினத்தவர்கள், பெண்கள் மற்றும் குடியுரிமை பெற்றவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. துப்பாக்கி கலாசாரம், இனவெறி குற்றங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இவரை போன்ற அரசியல் தலைவர்கள் இன்னும் பலர் தேர்வு செய்யப்பட வேண்டும்’’ என்று கூறினர்.

* ஒரே நாளில் பிடெனுக்கு ரூ.195 கோடி நிதி

ஜூலை நிலவரப்படி, குடியரசு கட்சியின் மொத்த தேர்தல் நிதி ரூ.2,250 கோடியாக உள்ளது. ஆனால் கமலாவை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்த 24 மணி நேரத்திலேயே பிடெனுக்கு 1.5 லட்சம் நன்கொடையாளர்களிடம் இருந்து தேர்தல் நிதியாக ரூ. 195 கோடி கிடைத்தது. அதிபர் வேட்பாளர் தேர்வு பிரசாரத்தின் ஆரம்ப கட்டத்திலேயே கமலா ரூ.116.25 கோடி நிதி திரட்டினார். தற்போது துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வால் ஸ்டீரீட், இந்திய வம்சாவளியினர், ஆசிய சமூகத்தினர் வாரி வழங்கியுள்ளனர்.

* `கமலா ஆன்ட்டி’ நம்மில் ஒருவர்

நியூயார்க்கில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த இளம்பெண் தமானி ஜெயசிங்க கூறுகையில், ``ஜமைக்கா தந்தை, இந்திய தாய்க்கு பிறந்தவர் என்பதால், கமலா தெற்காசியாவை சேர்ந்தவராகி விட்டார். அதனால், அவர் மீது எனக்கு தானாகவே ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. அவர் நம்மில் ஒருவர். அவரை `கமலா ஆன்ட்டி’ என்று அழைக்கலாம்’’ என கூறினார்.

Related Stories: