வேலூர் மாவட்டத்தில் வெறிச்சோடிய முருகன் கோயில்கள் ஊரடங்கால் களையிழந்த ஆடிக்கிருத்திகை விழா: ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பக்தர்கள்

வேலூர்: ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்த ஆடிக்கிருத்திகை விழா இந்தாண்டு கொரோனாவால் களையிழந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் கிருத்திகை பெருவிழாவையொட்டி தமிழகத்தில் திருத்தணி, பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை உள்பட பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களிலும் சிறப்பு உற்சவங்கள் நடத்தப்படும். பக்தர்கள் மலர்க்காவடி, மயில் காவடி, பால் காவடி, பறக்கும் காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். மேலும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் திருத்தலங்களில் மேளதாளத்துடன் சிறப்பு பூஜைகள், காவடி எடுத்துச்சென்று காணிக்கை செலுத்துதல் போன்றவை நடக்கும்.

மேலும் பல இடங்களில் இன்னிசை நிகழ்ச்சி, தெப்போற்சவம், நாடகங்கள் என கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இதற்காக ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆடிக்கிருத்திகை விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நேற்று ஆடிக்கிருத்திகைக்கு காவடிகள் எடுத்து வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோயிலுக்கு செல்லும் வழிகளில்  பேரிகார்டுகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் வழக்கமாக நடைபெறும் சிறப்பு பூஜைகள் மட்டும் நடந்தது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆடி பரணி விழாவும், ஆடிக்கிருத்திகை விழாவும் நடந்தது. அதிகாலையில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. இதில் பாலமுருகனடிமை சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். அதேபோல் பாலமதி குழந்தை வேலாயுதபாணி, வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. உள்ளூர் பக்தர்கள் மட்டும் காவடி எடுத்து வந்து கோயிலுக்கு வெளியே நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் மாவட்டத்தில் புதுவசூர் தீர்த்தகிரி, சாத்துமதுரை முருகன் கோயில், 65புத்தூர் அசரீர் மலை, அரியூர் கைலாசகிரி, ஆம்பூர் கைலாசகிரி, பச்சைக்குப்பம், அணைக்கட்டு வேலாடும் தணிகைமலை, மேல்அரசம்பட்டு சிவசுப்பிரமணியசுவாமி, மேல்மாயில் மயிலாடும்மலை, ஜலகாம்பாறை, பசலிக்குட்டை, மகாதேவமலை, ஒடுகத்தூர் முத்துக்குமரன்மலை, ஏலகிரி மலை என பல்வேறு முருகன் தலங்களிலும், வேலூரில் குயப்பேட்டை பேரி சுப்பிரமணியசுவாமி, கொசப்பேட்டை சுப்பிரமணியசுவாமி, தொரப்பாடி சுப்பிரமணியசுவாமி,

சைதாப்பேட்டை பழனியாண்டவர் சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. வழக்கமாக செல்லும் கோயில்களுக்கு செல்ல முடியாத நிலையில் அந்தந்த ஊர்களில் உள்ள கோயில்களிலேயே பக்தர்கள் காவடி எடுத்து காணிக்கை செலுத்தினர். கொரோனா தாக்கத்தால் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஆடிக்கிருத்திகை பெருவிழா இந்தாண்டு களையிழந்தது.

Related Stories: