'மத்திய அரசு அலுவலகங்களில் மொழி பிரச்சனை உள்ளது! ': தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு..!!

சென்னை: மத்திய அரசு அலுவலகங்களில் மொழி தொடர்பான பிரச்சனை இருப்பதாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி  தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கூறியபோது, நீங்கள் இந்தியர் தானா என்று பெண் ஊழியர் ஒருவர் கேள்வி  எழுப்பியது சர்ச்சைக்கு வித்திட்டது. தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்தி திணிப்பிற்கு எதிராக குரல்  கொடுத்தனர்.

இதையடுத்து தமிழில் பேச தெரிந்த 25 பாதுகாவலர்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படை தலைமையகம்  உடனடியாக நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் மொழி தொடர்பான பிரச்சனை  இருப்பதாக தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் எச்.ராஜா குறித்த ட்விட்டர் தொடர்பான கேள்விக்கு  பதிலளித்த அவர், தனக்கு ஹிந்தி தெரியுமா என்பதை ஆராய்வதை விடுத்து ஹிந்தி தெரிந்தால் இந்தியர்கள் என்ற  எண்ணத்தை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், அனைத்து மாநிலங்களில் இயங்கும் மத்திய அரசு  அலுவலகங்களில் மொழி பிரச்சனை இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே முன்னாள் துணை பிரதமர்  தேவிலால் தமிழகம் வந்த போது கனிமொழி இந்தி உரையை மொழி பெயர்த்ததாக கூறப்பட்டதில் உண்மை இல்லை  என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார். மேலும் தேவிலால் தமிழ்நாடு வந்த போது தானே  மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டேன் என்று தேவசகாயம் கூறியிருக்கிறார்.

Related Stories: