சர்வதேச இளைஞர்கள் தினம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு முக்கியம்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கு முக்கியமானது என்றும், சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இன்று, சர்வதேச இளைஞர்கள் தினம். ஆனால், இந்த ஆண்டே ‘இளைஞர்களின் ஆண்டு’ என்று சொன்னால் மிகையாகாது. இன்றுள்ள சூழ்நிலை குறித்து இந்தாண்டு தொடக்கத்தில் நாம் எவருமே நினைத்திருக்க மாட்டோம். கொரோனா தொற்றினால் பொதுமுடக்கம் தொடங்கிய போது, பலரும் முடங்கிய வேளையில், இளைஞர்கள் தான் களமிறங்கி, அத்தியாவசியப் பொருட்களான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகித்து, தேவைகளைப் பூர்த்தி செய்தனர்.

அன்று தலைவர் கலைஞரோடு லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு, இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் எழுப்பி, திராவிடக் கொள்கையை நிலைநாட்டியதின் விளைவே, இன்று, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். சமநிலையான சமத்துவச் சமூகத்தை உருவாக்க நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளையும் அயராது உழைக்கும் வலிமையையும் மனமார வாழ்த்துகிறேன். சரியான சிந்தனையும், என்றும் தளராத அர்ப்பணிப்பும் இருந்தால், எப்பெரும் தடைகளையும் இளைஞர் பட்டாளத்தால் தகர்த்திட இயலும், வென்றிட முடியும் என்பதை ஒருபோதும் மறவாதீர்.   

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: