கொரோனா அச்சுறுத்தலால் தனது மகனுக்கு பரோல் கோரி பேரறிவாளன் தாயார் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு..!!

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு பரோல் கோரி  பேரறிவாளன் தாயார் தாக்கல் செய்த மனு தற்போது ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் தமது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அவரின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் இருக்கிறது.

தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல நோய்களால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனுக்கு கொரோனா பாதிக்கும் அபாயம் அதிகளவில் இருப்பதால் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 2017, 2019-ல் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கியதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் பேரறிவாளனுக்கு எத்தனை நாட்கள் பரோல் வழங்கப்பட்டது, நிபந்தைகள் என்ன உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டதால் வழக்கு விசாரணையை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: