அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது இந்தியர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை: ஓ.பி.எஸ். ட்வீட்

சென்னை: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸீக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாதேவி ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கமலாதேவி ஹாரிஸ் சென்னையை சேர்ந்தவர். தனது சிறு வயதில் சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் வசித்திருந்தார். இவரது தாய் சியாமளா தமிழ்ப் பெண். தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தனது இளமைப் பருவத்தை நெருங்கும்போது தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தற்போது கலிபோர்னியாவில் கமலா தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் மற்றும் துணை அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வரும் இவர், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசியலில் தீவிரமாக களமிறங்கினார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செனட்டர் தேர்தலில் வெற்றிப்பெற்று கலிபோர்னியாவின் செனட்டராக பதவியில் இருக்கிறார்.  இந்நிலையில், அமெரிக்கா துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய தமிழ் வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ்க்கு தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இது இந்தியர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணம். முதல் இந்திய வம்சாவளி செனட்டரான கமலா ஹாரிஸின் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கமலா ஹாரிஸ் தற்போது அமெரிக்க ஜனநாயகக் கட்சியால் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துக்கள், என தெரிவித்துள்ளார்.

Related Stories: