கொசஸ்தலை ஆறு வடிநில பகுதிகளில் ரூ.2,500 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வடிகால்: மாநகராட்சி டெண்டர் கோரியது

சென்னை: கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் ரூ.2,518 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்கு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 1,894 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகால்கள் அனைத்தும் மழைநீர் வடிகால் துறையால் பராமரிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து 2016 மற்றும் 2017ம் ஆண்டு மழைக் காலங்களின்போது கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மழைநீர் வடிகால்கள் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

அதன்படி கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டு, திட்ட அறிக்கையும் தயார் செய்யப்பட்டது. இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி உதவி கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

அதன்பேரில், கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் ரூ.2,518 கோடி மதிப்பில் 763 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி அளிக்க ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, மழைநீர் வடிகால் பணிக்கு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. மொத்தம் 11 பகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. ரெட்டேரி, புழல் ஏரி, கொரட்டூர், அம்பத்தூர் ஏரி ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கப்படவுள்ளதாக மழைநீர் வடிகால் துறையின் தலைமை பொறியாளர் நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: