அரசுப்பள்ளிகளில் 1, 6, 9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை 17ம் தேதி துவக்கம்: கல்வித்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: அரசுப் பள்ளிகளில் 2020-21ம் கல்வி ஆண்டில் 1, 6, 9ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 17ம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலகத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை. கொரோனா தொற்று பாதிப்பு முழுமையாக நீங்கிய பிறகுதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கல்வித்துறை மாணவர் சேர்க்கை குறித்து முடிவு எடுத்துள்ளது. இதன்படி, 2020-21ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 1, 6 மற்றும் 9ம் வகுப்புகளில் 17ம் தேதி முதல் நடக்கும். சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசின் வழிகாட்டுதல்கள் மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்க வேண்டும்.

மேலும், ஒரு பள்ளியில் இருந்து வேறு ஒரு பள்ளிக்கு மாறுவதன் காரணமாக 2ம் வகுப்பு முதல் 10ம் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கான சேர்க்கையும் 17ம் தேதி முதல் நடக்கும். அனைத்து மேனிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கை 24ம் தேதி முதல் நடக்கும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கும் நாளிலேயே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி தனியார் பள்ளிகளில் எல்கேஜி, முதல் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை செய்ய இணைய தளம் மூலம் பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் மூலம் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: