வருவாய் நிர்வாக ஆணையர், போக்குவரத்து ஆணையர் 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

சென்னை: தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து ஆணையர் ஜவஹர் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கன்னியாகுமரி எம்பி எச்.வசந்தகுமாரும் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரையும் மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் தலா 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சுகாதாரத்துறைக்கு உதவியாக கொரோனா தொற்று தடுப்பு பணியில் வருவாய்த்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி மாநிலம் முழுவதும் சென்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்த வருவாய் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று போக்குவரத்து துறை ஆணையர் தென்காசி ஜவஹர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கடந்த 9ம் தேதி கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து ஆணையருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நீலாங்கரையில்  அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

* எம்பி. எச்.வசந்தகுமாருக்கும் கொரோனா

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் (70), ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். மேலும், அவரது தொகுதியில் கொரோனா தொற்று தடுப்பு பணி குறித்தும் தொகுதி முழுவதும் ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், அவருக்கும், அவரது மனைவி தமிழ் செல்விக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவர்கள் நேற்றுமுன்தினம்  ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: