நடிகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்ததாக கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் போலீசில் நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பர் ஆன்லைன் மூலம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ‘தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மூத்த தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோரின் சிலைகள் மீது காவிச்சாயம் ஊற்றியும், சேதப்படுத்தியும் அவமதிக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது சம்மந்தமாக பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு சமூக வலைதளங்களில் பா.ஜ.க நிர்வாகியும், நடிகருமான எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசிய கொடியை தான் ஆகஸ்டு 15ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளையும், பச்சையும் மட்டும் அதாவது ஹிந்துவை தவிர்த்துவிட்டு கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மட்டும் இருந்தால் போதுமானது என்ற முடிவுக்கு முதல்வர் வரத் தயாரா என்றெல்லாம் பேசி உள்ளார். எனவே, தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி. சேகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’. இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: