15வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.355 கோடி நிதி ஒதுக்கீடு

டெல்லி: 15வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்துக்கு ரூ.355 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு ரூ.6,196 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான மானியமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி உதவும் என்று நிதி ஒதுக்கீடு பற்றிய தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வரி வசூலிக்கும் கட்டமைப்பில், பெருமளவிலான வரியை மத்திய அரசு பெறுகிறது; ஆனால், பெருமளவிலான செலவுப் பொறுப்புகளை மாநில அரசுகள்தான் செய்ய வேண்டும். ஆகவே மொத்த வரி வருவாயை எந்த அளவுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பகிர்ந்துகொள்வது என்பதை முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது. மேலும் மாநிலங்களுக்கென ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதியை ஒதுக்க வேண்டும் என்பதையும் கணக்கிட வேண்டும். இதைச் செய்வதற்காகத்தான் நிதிக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து இருக்கிறது.

மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 2015-20 காலகட்டத்தில் மாநிலங்களுக்கு 42 சதவீத வரிப் பகிர்வு இருந்த நிலையில், இந்த ஆண்டிற்கான வரிப் பகிர்வு 41 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்த வரியில் ஒரு சதவீதம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீர், லடாக் பிரதேசங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நிதி குழுவைப் பொறுத்தவரை, ஏழ்மையான நிலையில் உள்ள மாநிலங்கள் தங்கள் சமூக நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக போதுமான நிதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதன் காரணமாகவே, வளமான மாநிலங்களிடமிருந்து பின்தங்கிய மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி பிரித்துக்கொடுக்கப்படுகிறது.

Related Stories: