3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி பொருத்தும் பணி அக்டோபரில் முடிவடையும்: உயர் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, குறிப்பிட்ட சில கடைகளில் சோதனை அடிப்படையில் அலாரம் கருவி பொருத்தப்பட்டது. பின்னர், ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டது.

இந்நிலையில், டெண்டர் விடும் பணிகள் முழுமையாக முடிந்ததையடுத்து, முதல்கட்டமாக பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் ஏற்கனவே திருட்டு சம்பவம் நடந்த கடைகள் ஆகியவற்றை அதிகாரிகள் கணக்கெடுத்தனர். அதன்படி சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மண்டலங்களில் உள்ள 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கடைகளில் ஆய்வுப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதுகாப்பற்ற கடைகளாக கண்டறியப்பட்ட 3 ஆயிரம் கடைகளில் மொத்தம் 6 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

ஒரு கடைக்கு இரண்டு கேமராக்கள் வீதம் பொருத்தும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் 535 கடைகளிலும், கோவை மண்டலத்தில் 450 கடைகளிலும், மதுரை மண்டலத்தில் 755 கடைகளிலும், சேலம் மண்டலத்தில் 565 கடைகளிலும், திருச்சி மண்டலத்தில் 695 கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. தற்போது கொரோனா தடுப்பு காலகட்டம் என்பதால் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றி கேமரா பொருத்தும் பணி நடக்கிறது. இதேபோல், பணிகளை வேகமாக முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்திற்குள் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழுமையாக முடிந்துவிடும். இதன்மூலம் திருட்டு, வழிப்பறி, கடைகளின் முன்பு தகராறு போன்ற சம்பவங்கள் தவிர்க்கப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: