கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை: வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறுகிறது

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் தொடர்ந்து 7 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், தமிழகம், மராட்டியம், டெல்லி, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதே நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000த்தை கடந்துள்ளது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா, மேற்கு வங்கம், உ.பி. உள்பட 10 மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக விவாதிக்க உள்ளார். மேலும், கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு இன்னும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளார்.

அதேபோன்று தமிழகத்தில் கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து பிரதமரிடம் எடப்பாடி பட்டியலிடவும் திட்டமிட்டுள்ளார்.

மத்திய அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனாலும், மாநில அரசு மத்திய அரசு அறிவித்துள்ள அனைத்து தளர்வுகளையும் பின்பற்றுவது இல்லை. இதற்கான காரணம் குறித்தும் முதல்வர்கள் பிரதமரிடம் விளக்குவார்கள். மேலும், நாடு முழுவதும் பள்ளிகளை வரும் செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக திறக்க மத்திய அரசு யோசித்துள்ளது. இதுகுறித்தும் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: